Posted in #SriScribbles, Society

இந்திய ஜாதிகளும் உலகமயமும்

 

 

கடந்த சனிகிழமை, ஹெல்சிங்கியில் இயங்கி வரும் ஒரு சிறிய வாசகர் வட்டத்திற்கு சென்றிருந்தேன். சென்னையில் கலந்துகொண்ட வாசகர் வட்டங்களுக்கும் இதற்கும் பல வேறுபாடுகள், பல புரிதல்கள். அன்றைய சந்திப்பில் துருக்கி, ரஷ்யா, பின்லாந்த், அமெரிக்கா என வெவ்வேறு நாட்டவர்களுடன் சந்திக்கும், பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பன்மையில் ஒருவனாய் நானும் உரையாடலில் இனைந்து கொண்டேன்.

 

வரலாற்று புனைவு சார்ந்த புத்தகங்கள் பற்றிய உரையாடல் என்று முடிவு செய்திருந்தனர்.. மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட உரையாடல் வரலாற்றில் தொடங்கி அரசியல், போர்,  மதம் என பலவாய் விரிந்தது. அந்த ஒற்றை சந்திப்பு, நாம் ஒரு சமூகமாக எந்தளவிற்கு வாசிப்பு பழக்கமற்று இருக்கிறோம் என்பதை தெளிவாய் உரைத்தது என்று தான் சொல்ல வேண்டும்..பல வித தலைப்புகளை பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய அந்த உரையாடலின் ஒரு பகுதியை பற்றிய பதிவே இது.

 

சுய அறிமுகம் முடிந்து, அவரவர் படித்த வரலாற்று புனைவு மற்றும் அதன் தாக்கத்தை பேசிக்கொண்டிருக்க., ஹிந்து மதம், புத்தர் ,இந்தியா பற்றிய தலைப்பிற்கு மாறியது விவாதம். இந்தியா என்ற நிலையில் அனைவரும் என்னை கவனித்துக் கொண்டே பேசினர் (நான் இந்தியாவிலிருந்து வந்திருந்ததாலும், புத்தகம் அதிகம் படிப்பவன் என்று அவர்கள் கற்பனை செய்து கொண்டதாலும்). அந்தக் கருத்து பரிமாற்றத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி

 

“இந்தியாவில் இன்றும்  ஜாதிய நிலைபாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கின்றன அல்லவா?” என்பதே

 

ஒரு நிமிடம் மற்ற நாடுகளை சார்ந்தவரிடம் இருந்து இதை எதிர்பாராத நான், ஆம் என்றேன். ஆம் என்ற பதிலுக்கு ஒவ்வொருவரின் முகத்திலும் அவர்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சியை உணர மட்டுமே முடியும்.. எத்தனையோ நாட்கள், மற்ற நாடுகளிடம் இந்தியா என்பதற்கு கலாச்சாரம் (கலாச்சாரம் என்பதற்கான விளக்கத்தில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் பொதுவெளி புரிதலை இங்கே குறிப்பிடுகிறேன்) , வரலாறு என்று அடையாளம் காட்டி வந்த நாம் அதே வரலாறு , கலாச்சாரம் என்ற பெயரில் ஜாதியையும் அதன் படிநிலைகளையும் ஒட்டிக்கொண்டு பயணிப்பதும், அவற்றை பரந்த வாசிப்பு கொண்ட உலகம் தெளிவாய் கவனிக்கும் நிலையில் கலாச்சாரம் வரலாறு என்று கூறி கொள்வதில் எந்த வித பெருமிதமும் இல்லை மாறாக குற்ற உணர்ச்சியே இருத்தல் வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அடுத்ததாக,

 

“ஜாதிகள் சரி, குறைந்தபட்சம் ஜாதிகளினிடையே திருமணங்கள் கூட நடப்பது இல்லையா?” என்ற கேள்விக்கும் ஆம் என்றே நடைமுறையை சொல்ல முடிந்தது.

 

தொடர்ச்சியாக,

 

“ இந்தியாவில் ஒருவரின் பெயரை வைத்தே அவர்கள் எந்த ஜாதி, தாழ்ந்த ஜாதியா உயர்ந்த ஜாதியா என அறிந்து கொள்ள முடியுமாமே?”

 

இந்த கேள்விக்கு, ‘ நான் இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில் இருந்து வருகிறேன், அங்கே பெரும்பாலும் ஒருவரின் பெயரை வைத்து இன்றைய அளவில் ஜாதிய படிநிலையை அறிய முடியாது. ஆனால் ஏனைய மாநிலங்களில் பெயரை வைத்தே என்ன ஜாதி, ஜாதிய  படிநிலையில் எந்த நிலை என அறிந்து கொள்ளலாம்” என்றதும் அதெப்படி ஒரு மாநிலத்தில் மட்டும் இதும் சாத்தியம் என்றனர்.

 

எந்த வித கருத்தியல் மீதும் முழு ஈடுபாடு கொள்ளாதிருக்கும் எனக்கு, இந்த கேள்விக்கு பதிலாய் திராவிட அரசியலும் அதன் கருத்தியலும் தவிர வேறு பதிலில்லை. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்த கருத்தியலையும் ஜாதிகளை களையும் முன்னெடுப்பை நடத்தியவர்கள் யாரென தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்ட கேள்விக்கு முதல் பதிலாய் பெரியார், அண்ணாவை கூற, அவர்களை படிக்கிறோம் என்று பெயர்களை குறித்து கொண்டனர்.

 

இந்த உரையாடலில் என் எண்ண ஓட்டத்தை மிகவும் அதிக படுத்திய விஷயங்கள் சில.,

அரசியல், சமூக போன்றவற்றின் மீதான நமது பார்வையை, சமத்துவம் எனும் நிலைக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அடியையும் வரலாற்றையும் மக்களையும் அரசியலையும் படிக்காது, வெறும் சமகால செய்திகளால் மட்டும் ஏற்படுத்திக் கொள்வது பிற்போக்கு அன்றி வேறில்லை.

 

இன்று திராவிடத்தால் வீழ்ந்தோம், ஜாதிய பெயர்களை கலைந்ததால் அடையாளம் தொலைத்தோம் என புலம்புவது எல்லாம் அறியாமையின் விளைவு என்று சொல்வதா இல்லை, முன்னேறிய நிலையில் இருக்கும் ஆணவம் என்று சொல்வதா தெரியவில்லை. ஜாதி ஒழிப்பு பேசும் திராவிடம் இத்தனை ஆண்டுகளில் ஜாதியை ஒழித்து விட்டதா என்றால் இல்லை தான், ஆனால் இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் எழுபது ஆண்டுகளுக்குமான ஒப்பீடு என்பதை நினைவில் கொள்வதும் அவசியமாகிறது.

 

கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கடவுள் எனும் கருத்தியல் கொண்டு அரங்கேற்றப்பட்டுள்ள போர்களும், ஒடுக்குமுறைகளும் சொல்லி அடங்காது. இந்த நிலையில், நம் கண் முன்னிருக்கும் கடவுள் சார்ந்த கருத்தியலால் மக்கள் நிலை பிரிக்க படுவதும், ஒடுக்கப்படுவதும் எதிர்க்கபடாமல், அதை எதிர்த்து கேள்வி கேட்பவரிடம் அந்த நாட்டில் இப்படி இந்த நாட்டில் அப்படி என்பதெல்லாம் தன் மீதான அழுக்கை பாராது மாற்றான் மேலிருக்கும் அழுக்கை துடைக்க சொல்வதை போன்றதே தவிர வேறில்லை.

 

இந்த ஜாதிய படிநிலைகளும், அதன் பொருட்டு ஒவ்வொரு நிலையிலிருக்கும் மக்கள் மீதும் ஏற்படுத்தப்படும் அழுத்தமும் நீடிக்கும் வரை அவற்றை எதிற்கும் கேள்விகளும், திராவிட கருத்தியலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.. அரசியல் கட்சிகளும் ஆட்சிகளும் மாறினாலும் இந்த கருத்தியல் தொடர்வதும் பரிணாம வளர்ச்சி அடைவதும் மிகவும் அவசியம் என்பது மட்டும் நிதர்சனம்.

Advertisements

Author:

Simple yet complicated..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s