Posted in #SriScribbles, சிதறல்

நிறைந்த இரவுகள்

 

IMG_20170309_185416

 

இரவுகளுக்கென்று ஒரு வசீகரமுண்டு,
உயிரசைவைத் தவிர்த்து வேறேதுமில்லா ஒரு அழகு
கண்ணீரை உறையச் செய்யும் , உவகையை உருகச் செய்யும்
வெறுப்பிற்கும் விருப்பிற்கும் இடையிலான மெல்லிறகாய்
கருமையின் குளிரும் பகலின் வெண்மையும்
குழைத்து செய்த ஒளிச் சிதறலாய்

 

நல்லிசைக்கே உரிய மௌனமே முழுவதுமாய்
கிறுக்கப்படாத பக்கங்களின் பிரதிபலிப்பில்
அகம் புறமென கேள்விகளும் பதில்களும்
மோதி கதைத்துக்கொள்ளும் உயிர்மிக்க உரையாடல்

 

ஏகாந்தம் தனிமையில்லை தன்னிசையென
கடிகார முற்களின் தாலாட்டில், காற்றை வருடும் இலைகளில்
மேகம் கடக்கும் பிறைகளில், கூழாங்கற்கள் வழியோடும்,
அருவிகளின் குறைவில்லா பறவை கானமும்
காற்றாற்றின் ஆழ்மனதின் அமைதியும் ,
இரவு.