Posted in #SriScribbles, Politics

கமல் எனும் கலைஞனின் அரசியல்!

கலை மற்றும் அதனூடே வரும் ரசிக மனோபாவம் மக்களை வேற்றுமை கடந்து ஒன்றிணைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் இருந்து வந்திருக்கிறது. இன்றும் கூட. ஒரு திரைப்படத்தையோ, பாடலையோ, புத்தகத்தையோ கொண்டாடும் பொழுது பல நேரங்களில் வேற்றுமையும் வெறுப்புணர்வுகளும் மறைந்து விடுவதுண்டு. அதனாலேயே தான், கலை பின்புலத்தில் இருந்து ஆளுமைகள் வருவது அரசியலுக்கு ஆரோக்கியமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

 

கலை போன்ற மக்கள் அறிமுகம் கொண்ட துறைகளில் இருந்து அரசியல் முன்னெடுப்புகள் எடுப்பவர்களுக்கு, இயற்கையாகவே அவர்களின் அரசியல் பிரவேசத்தில் ஒரு ஆரவாரமும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொள்வது இயல்பே., அதன் வெளிப்பாடாகவே ரஜினி , கமல் என இருவரின் அரசியல் சம்பந்தப்பட்ட குறைந்த பட்ச நகர்விற்கு கூட ஊடகம் மற்றும் பொது தளங்களில் ஒரு hype ஏற்படுகிறது.

 

சரி, எல்லோரும் அரசியலுக்கு வரலாம்., நடிகர் என்பதற்காக , தமிழ் நாட்டில் பிறக்காதவர் என்பதற்காக, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்காக புறக்கணிக்கிறோம் என்பது சற்றும் முற்போக்கு தன்மையற்ற காரணங்கள் என்று சொல்லும் அதே நேரத்தில், அவர்கள் முன் வைக்கும் கொள்கைகளை (குழப்பங்களை!) கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும் மிக பெரிய அபத்தம்.

 

நட்சத்திர நிலையும், கலையால் ஏற்பட்ட மக்கள் அறிமுகமும், சமூக அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஒரு முகப்பு மட்டுமே., அது மட்டுமே போதுமானதில்லை என்பதை நடிகர்களும் இன்றைய மக்களும் புரிந்து கொள்வது அவசியம். கமலையோ ரஜினியையோ MGR உடன் ஒப்பிடுவது என்பதே கடந்த சில ஆண்டுகளாக நாம் வளர்த்துக் கொண்ட அரசியல் அறியாமையின் பக்க விளைவுகளில் ஒன்று. MGR தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதற்கு முன்னமே நீண்ட காலம் செயல் அரசியலில் இருந்தவர். அன்றைய மக்கள் MGR ஐ ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாகவும் (படங்கள் தொடங்கி மேடை பேச்சு, தேர்தல் வரை திராவிட அரசியல் சித்தாந்தங்களை பேசி வந்தவர் ( பிற்காலங்களில் அவை மாறின என்பது தனிக்கதை)) சேர்த்தே உருவகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் இதுவரையிலான அரசியல் பங்களிப்பு என்பது சொற்பமே (நற்பணி மன்றங்கள், அரசுகளை அரசு இயந்திரங்களை பகைத்துக் கொள்ளாத வழித் தடங்கல் அவை. அவை என்றும் அரசியலற்ற செயல்பாடுகள் தான்) . சிவாஜியின் அரசியல் தோல்வியும் இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவும்.

 

கமல் என்ற கலைஞனின் ரசிகன் நான். ஒரு கலைஞனாக கமலின் படைப்புகள் பல படிநிலைகள் கொண்ட கருத்துக்களாகவே என்றும் தெரிந்திருக்கின்றன. உலக அரங்கில் இருக்கும் பல மொழி திரைப்படங்களின் தாக்கங்களையும் பிரதிபலிப்புகளையும் தமிழ் திரைப்படத்துறைக்கு கொண்டு சேர்த்தவர் என்ற முறையிலும் கமல் எனும் கலைஞனிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றன. ஆனால், ஒரு அரசியல்வாதியாக கமலின் முதல் பொதுக்கூட்டமும் பேச்சும் ஏமாற்றமாகவே அமைந்தது.

 

கொள்கை என்ன என்றால் தலை சுற்றுகிறது என்று ரஜினி சொல்ல, அதையே கொஞ்சம் வித்தியாசமாக மற்றவரை சுற்றலில் விடும் வகையில் எனக்கு இதுவும் பிடிக்கும் அதுவும் பிடிக்கும் என்று மழுப்பல்கள் நிறைந்த பேச்சே அரசியலிற்குள் அதிகாரப்பூர்வமாக வந்த பின்னும் செய்கிறார் கமல். அதுபோக ‘நீங்கள்’ தவறு செய்கிறீர்கள், என்று சாமானியனை குற்றவாளியாக மாற்றுவதும்.,’கொள்கைகள் இப்பொழுது உங்களுக்கு தேவை இல்லை, படிக்கணும் னு எதிர்பாக்குறவங்களுக்கு புக் குடுத்துக்கலாம், உங்களுக்கு அது தேவை இல்லை’ என்று சாமானியனை intellectually inferior ஆக கட்டமைப்பது மற்றும் ‘தான்’ என்ற தொனி பேச்சும் சற்று தூக்கலாக இருக்க, நேற்றைய பேச்சுடன் சற்றும் ஒத்துப்போக முடியவில்லை.. இவை எல்லாம் பேச்சு ஆற்றல் (oratorical skill ) இல்லாத ஒருவரின் மேடை பேச்சில் இருந்தால் அது ஏமாற்றமாக தெரியப்போவதில்லை.

 

மேலும், கல்வி , மின் துறை என தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய துறைகளையே குறையாக சுட்டி காண்பிப்பது மாநில சுயாட்சிக்கு இன்றும் பலம் சேர்க்கும் தமிழகத்திற்கு எதிராய் மத்திய அரசில் பங்கு வகிக்கும் தேசிய கட்சிகளின் தொடர் குரலின் ஒரு பகுதியாகவே தெரிகிறது, எல்லாவற்றிற்கும் மேலான முத்தாய் , அரவிந் கெஜ்ரிவாலின் ஆதரவு மற்றும் ஊழல் ஒழிப்பு தான் தலையாய பணியாக கூறுவது 2014 இல் மத்திய ஆட்சி மாற்றத்தில் நடந்த அதே திரைக்கதையை மட்டுமே நினைவூட்டுகிறது.

 

எந்த வித நேரடி கொள்கை பிடிப்புமின்றி, கலை நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக செல்லும் இடங்களிலும் கள அரசியல் பார்வையற்ற அடுக்குமாடி AC அறை அரசியலை மட்டுமே நேற்று கேட்க முடிந்தது என்பது ஏமாற்றமே., அரசியல் விமர்சனம் செய்பவர்களும் கட்சி சார்பில்லாதவர்களும் நடுநிலை என்று சொல்வதை கூட புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ஒரு கட்சியின் தலைவர் / நிறுவனர் என்ற முறையில் எந்த பக்க சாய்வும் இல்லை என்பதை சாய்வை வெளிப்படுத்த தயங்குகிறார் என்று எடுத்துக் கொள்வதா , இல்லை அவருக்கும் கொள்கை என்றால் தலை தான் சுற்றுகிறதா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. தன் கொள்கையை, அதன் பிடிப்பை உறுதியாக சொல்ல முடியாத, எத்தினிக்காத ஒரு தலைமையையும் கட்சியையும் அழுத்தமான அரசியல் ஆளுமையாய் யோசித்துப் பார்த்துக் கொள்ள கூட மனம் மறுக்கிறது.

 

மொத்தத்தில், கமல் என்ற கலைஞனை இனியும் திரையில் பார்க்க முடியாது என்பது மிகப் பெரிய ஏமாற்றமே

Advertisements
Posted in #SriScribbles, Politics, Society

தற்கொலையும் ஆற்றாமையும்..

 

 

இன்று மதியம் வந்த செய்தியிலிருந்து ஆற்றாமை, கோபம், துயரம் என அனைத்தும் கலந்து தொண்டையை அடைக்கிறது., ஒவ்வொரு முறை அனிதா இதற்கு முன் பேசிய பதிவை இப்பொழுது பார்க்கும்போது இதயம் கனப்பதையும், கைகள் நடுங்குவதையும், கண்கள் ஈரமாவதையும் ஏனோ தடுக்க முடியவில்லை. தற்கொலை என்பதின் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பும் விமர்சனமும் இருப்பினும் தற்கொலை எனும் சிந்தனைக்கு ஒருவர் அறிந்தே தள்ளப்படுவதும், அதையே ஏளனம், அதற்கே அறிவுரை கூறுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

 

ஒவ்வொரு முறை அந்த காணொளியைப் பார்க்கும்பொழுதும், கடந்த மூன்று நான்கு வருடங்களில் அனந்தபுரத்தில் நான் பேசிப் பழகிய ஒவ்வொரு குழந்தையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறாள் அனிதா. அந்த நினைவு இந்த துயரத்தின் தாக்கத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆற்றாமையும், கோவமும், துயரமும் ஒரு சேர அறைவது போன்ற ஒரு உணர்வு. உள்ளுணர்வின் வெளிப்பாடாக, கள்ளம்கபடம் அற்ற ஒரு உண்மையான மனதையும் மகளையும் துச்சமாக்கியிருக்கிறது இன்றைய அரசுகளும் நாமும்.

 

இந்த மரணத்தில், தற்கொலை தவறு அதிலிருந்து அவளை அவள் பெற்றோரும் ஆசிரியரும் மீட்டிருக்க வேண்டும், மருத்துவம் இல்லையென்றால் வாழ்கையில்லையா வேறு படிப்பு இல்லையா, NEET தான் மருத்துவ நுழைவு என்று மத்திய அரசு சொல்லிய பிறகு அதற்கான பயிற்சியை அவள் எடுக்காதது யார் தவறு என்று கேட்போரை கண்டு வரும் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை. பள்ளி நேரத்தை முடித்து மற்ற வேளையில் தாய்/ தந்தையுடன் செங்கல் சூலையிலோ, பாறை உடைப்பதிலோ , தினக் கூலியிலோ உதவியாக நேரத்தை செலவிட்டு, மீதமுள்ள நேரத்தை பயன்படுத்தி 70 வருடமாக தமிழக அரசியல் வளர்த்த பாடத் திட்டத்தையும், அரசையும், தன் உழைப்பையும் மட்டுமே நம்பி போராடி தேர்வில் எல்லா வசதி வாய்புகள் கொண்ட சூழலில் வளர்ந்தவர்களால் கூட எட்ட முடியாத மதிப்பெண்ணை எட்டிய மாணவியை இது போன்ற  கேள்விகள் கேக்க உண்மையில் நாக்கு குறைந்தபட்சம் கூசியிருக்க வேண்டும்.

 

இத்தனை இன்னல்களையும் கடந்து கடினமாக உழைத்து  படித்து வெற்றி பெற்ற மாணவியை, வருட கணக்காக பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று, வீட்டில் வசதி வாய்ப்புடன் பயிற்சி பெற்ற ஒருவருடன் போட்டித் தேர்வில் ஓட சொல்வது அநீதியன்றி வேறென்ன? அவளை தகுதியற்றவள் என்று சொல்வது அயோக்கியத்தனமன்றி வேறென்ன? இதில் அவளுக்கு ஏன் அரசுப் பள்ளிகள் பயிற்சி அளிக்கவில்லை, syllabus சரி இல்லை, இன்னும் ரெண்டு வாய்ப்பு இருக்கிறதே என்ற மேலடக்கு கேள்விகள் வேற. பயிற்சி மையங்களுக்கான செலவு, அதை பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உங்களுக்கு வேண்டுமானால் ‘just like that’ போன்ற விஷயமாக இருக்கலாம். அவை பற்றி அறிந்து கொள்ள முடியாத சமூக பொருளாதார சூழலில் உள்ள மாணவர்கள் பெருநகரம் என்று சொல்லக் கூடிய சென்னையிலும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பும், தலைமுறைகளின் கனவின் பதிலுமே பொது தேர்வு அடிப்படியிலான கல்லூரி மாணவர் சேர்க்கை. இன்று அதை தரமற்றது என்று நிறுவ நினைப்பதும், அதை பயின்று தேரியவர்களை தகுதியற்றவர் என்று நினைப்பதும் உங்கள் மனதுகளில் படிந்து இருக்கும் நான் மேலானவன் என்ற ஆதிக்க மனோபாவமே அன்றி வேறில்லை.

 

psychology counseling என்று ஒன்று இருப்பதன் வாய்ப்பைக் கூட அறிந்திராத ஒரு மிக சாதாரண தளங்களில் இருந்து உழைத்து வந்த மாணவியை, அதை பெற்றுக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொண்டால் என்று சொல்பவரையும், அது தான் இரண்டு வருடம் இன்னமும்  இருக்கிறதே என்று கூறுவோரையும் படித்த அறிவிலிகள் என்று தான் கூற வேண்டியிருக்கிறது. இரண்டு வருடம் போட்டித் தேர்விற்கான பயிற்சிக்கு என நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நிலையில் இருக்கும் உங்களுக்கு சமூக பொருளாதார படிநிலைகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் துயரங்களும் அந்த தடைகளை கடந்திட இடும் எதிர் நீச்சல்களும் உங்களுக்குப் புரியப்போவதில்லை. புரிந்தாலும் உணரப்போவதில்லை.

 

 

அனிதாவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் கடந்த சில வருடங்களில் பார்த்து வந்த பல அனிதாகளின் சூழலையும் கனவுகளையும் அறிந்த ஒருவனாய் இந்த இழப்பை என்னால் இன்னமும் சாதரணாமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தரம் தகுதி என்ற தரவற்ற வீண் வெங்காய கருத்துகளை பார்த்து அந்த துயரமும், கோபமும், ஆற்றாமையும்  இரட்டிப்பாக மனது முழுவதும் நிலைகொள்கிறது. அதுவே, மனதில் இருப்பவை முழுவதையும்  இப்பொழுதும் எழுத விடாமல் கைகளையும், பேச விடாமல் தொண்டையையும் அடைக்கிறது.

 

பல சூழல்கள், பல அனிதாகள் வாழும் ஊரில், இனியொரு இன்றைய நிலை இல்லாமலிருக்க காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என கட்சி வேறுபாடுகளைக் கடந்து வளர்த்த கல்வியில் சமூக நீதியையும், மாநில சுயாட்சியையும் மீட்டு எடுப்பதையும் மத்திய ஒற்றைக் கொள்கையை விரட்டி அடிப்பதையும் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை.

 

Posted in #SriScribbles, Politics, Society

சமூக நெறியும் NEETஉம்..

NEET – தகுதி தேர்வு பற்றிய பலவாறான கருத்துகள் பரவி வரும் நிலையில், ஒரு சராசரி மாணவனாகவும் கடந்த சில வருட அனுபவங்களாலும்  ஏற்பட்ட சுய புரிதல் மற்றும் படிப்பினையிலிருந்து கல்வி, நுழைவு தேர்வு, அரசியலமைப்பு, மருத்துவக் கட்டமைப்பு போன்றவற்றின் மீதான பார்வையின் ஒரு பகுதியே இப்பதிவு.

 

இன்று NEET கட்டாயம் என்று மத்திய அரசால், திணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கும் சமூக நீதியிற்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். முதலாவதாக கூட்டாட்சி (federal) அமைப்பிற்கு புறம்பாகவும், இரண்டாவதாக சமூக மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு  எதிர்மறையாகவும்.

 

வெவ்வேறு மொழி, வாழ்வியல் முறை கொண்ட நாடு இந்தியா என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டிய புது செய்தியல்ல. இவ்வாறு பன்மை கொண்ட நாட்டின் அந்த பன்மையை பேணுவதற்காகவே, மாநிலங்களிற்கு என்று சுயாட்சி மற்றும் சுயமாக திட்டங்கள் அமல்படுத்தும் உரிமை  வழங்க பட வேண்டியிருக்கிறது, இதுவரையிலான பாராளுமன்ற அரசியல் ஓரளவேனும் வழங்கியும் வந்திருக்கிறது. குறிப்பாக மொழி, வாழ்வியல்  போன்றவை வெவ்வேறு மாநில மக்களிற்கும் மாறுபடும் சூழலில்., கல்வி, பொது சுகாதாரம் போன்றவையை தீர்மானிப்பது அந்த அந்த மாநிலங்களின் அதிகாரமாக இருப்பதே கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும். இந்நிலையில், எழுபது வருட சுயாட்சியில், எல்லா மாநிலங்களும் ஒரே சமமான காலகட்டத்திற்கு  மத்திய அரசில் அங்க வகித்தும், மாநில சுயாட்சி செய்தும் வந்த நிலையில், பொது சுகாதாரம், கல்வி போன்றவையில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்கள் மக்களுக்காக தொடர்ச்சியாக போதுமான வளர்ச்சி பெற்றுள்ளன. உதாரணத்திற்கு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கைப்படி வரிசைபடுத்துவோமேயானால் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகியவையே முதல் சில இடங்களில்  இருக்கின்றன. இத்தனை வருட வளர்ச்சியை ஒரே நாளில், ஒரே நாடு என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு என்ற முறையில் எழுபது ஆண்டுகள் எந்த வித மக்கள் அக்கறையும் கொள்ளாத பிற மாநில அரசின் குறைகளை நிரப்ப, தன் மக்களின் நலனை விட்டுக்கொடுக்க சொல்வது சுரண்டலன்றி வேறென்ன என்று கூறுவது. ஜனநாயக அரசியல்ப்படி எல்லா மாநிலங்களிலும் கல்வி பொது சுகாதார வளர்ச்சியை முன்னெடுக்காமல் இது போன்ற நகர்வுகள் வேதனையான அதிகார சுரண்டலாகவே தெரிகின்றன. (கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற  மாநிலங்கள் neet ஐ எதிர்காததிர்கான காரணத்தை தனி பதிவாகவே எழுதலாம்)

 

அடுத்ததாக, சமூக மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காண இடையூறாக  தகுதி தேர்வு விளங்குகிறது என்றே சொல்லலாம். கடினமான பாடத்திட்டம், கடினமான தேர்வு முறைகள் தான் தரமான பட்டதாரிகளை உருவாக்கும் என்பது மிக பெரிய மாயை. CBSE, Matric, சமச்சீர் / ஸ்டேட் போர்டு என எந்த பாடத்திட்டங்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் அடிப்படை ஒன்றாகவே இருக்கும் (மூன்றிலும் படித்த அனுபவம் உள்ள மாணவன் என்ற முறையில் என் அனுபவம் இது). பின்னர் ஏன் போட்டி தேர்வுகளில் CBSE மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதே பெரிய கேள்வி. போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள்., பல வருட கேள்வித்தாள்களையும், அதில் கேட்கப்படும் கேள்விகளையும் மாதிரியாகக் கொண்டு மாத / வருட கணக்காக வீட்டிலோ அல்லது பயிற்சி மையங்கள் மூலமாகவோ பயிற்சி பெறுபவர்களே. சரி, இது போன்று ஒரு வருடத்தை வீட்டிலே பயிற்சிக்காக கழிக்கவோ அல்லது ஒரு வருடம் பயிற்சி மையங்களில் சேரவோ முடிந்தவர்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களால் மட்டுமே ஒரு வருட காலத்தையோ ஒரு வருட பயிற்சி மையத்திற்கான செலவையோ ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பது தான் உண்மை. இந்த சமூக பொருளாதார பின்புலம் கொண்டவர்களே பெரும்பாலும் தங்கள் வீட்டுப்பிள்ளைகள் மற்றவரை விட தரமான பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்ற ஆதிக்க மனநிலையில் CBSE போன்ற பாடத்திட்டங்களில் குழந்தைகளை சேர்கிறார்கள் (பாடத்திட்டங்களுக்கு இடையேயான தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அறியாமல்). இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களை பார்த்து, சமூக பொருளாதார படிநிலை அடுத்திருப்பவரும் ஒரு கௌரவமாக கருதி CBSE ICSE ஆகியவற்றை நாடி செல்வதே. இந்த நிலையில் தான் CBSE மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்ற வாதம். உண்மையில், பெரும்பாலும் போட்டித் தேர்வு வெற்றிகள் பயிற்சியை பொருத்தது மட்டுமே (கல்லூரி நுழைவுத்தேர்வு முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரை). இதில் ஒரு பாடத்திட்டம் பெரிது மற்றொண்டு சிறிது என்பதும் இவையே போட்டித் தேர்வு முடிவுகளை முடிவு செய்கின்றன என்பதும் மாயையான வாதங்களே.

 

போட்டித் தேர்விற்கான பயிற்சியில் முழு மூச்சில் யாரால், எந்த வாழ்வியல் சூழலில் உள்ளோரால் முடியும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. பள்ளி முடித்து மற்ற நேரங்களில் தந்தை தாயுடன் வயலிலோ, குறுதொழிழிலோ பங்கு கொள்ளும் மாணவரையும், பள்ளிப்பாடம் மற்றும் தன் சுயதேவைகள் தவிர வேறு எந்த சிந்தனையும் கொள்ளத்தேவையில்லாத மாணவரையும் ஒரே தராசில் வைத்து பள்ளித்தேர்வுகளுக்கு மேல் போட்டித் தேர்வுகள் நடத்துவது எந்த  விதத்தில் நீதி என்று தெரியவில்லை.

 

நூற்றியிருபதிற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் பலராலும் கல்லூரிப்படிப்பை எட்டுவது கூட இன்றும் கனவாக இருப்பதற்கான காரணம் , மத்திய அரசால் நடத்தப்படும் பொறியியல் மருத்துவ, கல்லூரிகளின் சேர்க்கை முறையான இம்மாதிரி போட்டி தேர்வுகளினாலும், கல்லூரிகளின் குறைந்த எண்ணிக்கையினாலும் தான். இந்நிலையில், எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் இளங்கலை கல்வியை பெரும்பாலான எல்லாத்தர மக்களுக்கும் கொண்டு சேர்த்திருப்பது தமிழக கல்வி மற்றும் தேர்ச்சி முறையாலே.

 

நாட்டிலே அதிகபடியான அரசு நிர்வகிக்கும் மருத்துவக்கல்லூரிகள் கொண்ட மாநிலம், பரவலான இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிகள், நாட்டிலே சிறந்த பொது சுகாதார அமைப்பு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகள் வரை சிகிச்சை, நாட்டின் சராசரியை விட குறைவான பிரசவ இறப்பு விகிதம் என கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற பலவற்றிலும் தமிழகம் (தலைநகரம் மட்டும் அல்லாமல் மாநிலம் முழுவதுமான வளர்ச்சி) மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறி இருப்பதை ஐந்து நிமிட கூகிள் தேடல் கூட சொல்லி விடும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற மாநிலங்களை விட ஒட்டுமொத்த வளர்ச்சியில் மேம்பட்ட மாநிலமாக இருந்தும் இத்தனை குறை, கேள்வி கேட்கும் விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதே  தமிழகத்தின் கல்வி மற்றும் தேர்ச்சி முறைகளின் தரத்தின் அளவீடு, NEET அல்ல. இவையனைத்தையும் அடைய ஏற்பட்ட எழுபது ஆண்டு பயணத்தை ஒரே அடியாக பிடுங்கி எரிவதே NEETஇன் முடிவுகள்.

Posted in #SriScribbles, Politics, Society

இலவசம்

 

இலவசம் தான் நாட்டை கெடுக்கிறது, மக்களை சோம்பேறிகளாக்குகிறது என்ற எண்ணம் சில வருடங்களுக்கு முன் என்னுள் இருந்திருக்கிறது. ஆனால் கருத்துகளையும் நம்பிக்கையையும் சவால் விடும் படிப்பினைகளும் அனுபவங்களும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியான முரண்பட்ட கேள்விகளுக்கும் பதிலுக்குமான போட்டிப் பதிவே இது..

 

இன்றைய சூழலில் இலவசத்தோடு மானியத்தையும் ஒதுக்கீடுகளையும் கூட கேலியாக இழிவாக சித்தரிக்கும் பல பதிவுகளை பார்க்க முடிகிறது.

 

இவை மூன்றையும் சரியீடு என்ற வார்த்தை கொண்டு ஒருமைப்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. இவை மூன்றிற்கும் அவற்றின் பயன்பாட்டிற்கும் வேறுபாடுகள் இருப்பினும், சமன்படுத்துதல் என்ற புள்ளியில் மூன்றும் இணைகின்றன.வாக்கு அரசியல் மற்றும் அரசியல் நிர்வாக முறைகேடுகளை புறம்தள்ளி இந்த சரியீடுகளை பார்ப்பது மிகவும் அவசியமாகிறது. வாக்கு அரசியல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் மீதான கோவங்களையும், சமூக பொருளாதார படிநிலைகள் ஊட்டி வளர்த்த வெறுப்புகளையும் வன்மங்களையும் முதலீடாக கொண்டு கட்டமைக்கப்படும் கருத்தியல்கள் விளைவாகவே இந்த சரியீடுகளிற்கு எதிரான கேலி இழிவு பதிவுகளை பார்க்க முடிகிறது..

 

இன்று சமையல் எரிவாயு மானியம் படிப்பபடியாக ரத்து , பொது விநியோக முறை எனப்படும் ரேஷன் நிறுத்தம் போன்ற செய்திகள் உண்மை என்று ஒரு தரப்பும், இல்லை இவை ஊடகங்களின் பொய் பிரச்சாரம் என்று ஒரு தரப்பும் கருத்து மோதல்களில் ஏற்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு – ரேஷன் நிறுத்தம் போன்ற தலைப்பு பேச்சளவில் இன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதே ஒரு எச்சரிக்கையாக தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

சரியீடுகள், சலுகைகள் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..அரசு அளிக்கும் இலவசம் ,மானியம் , ஒதுக்கீடு ஆகியவை சமூக சமன்பாட்டிற்கும், பொது மக்களின் பயனுக்குமாக இருப்பின் அவை சலுகைகள் அல்ல, மாறாக அவையே ஒரு அரசு சாமான்ய மக்களுக்காக செயல்படுவதற்கான குறியீடுகள். கல்வி , மருத்துவம், வாழ்விடம், உணவு, போக்குவரத்து ஆகியவையே இன்றளவும் மக்களுக்கான அடிப்படை தேவைகள். இந்த அடிப்படை தேவைகளை நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் அளிப்பதே ஒரு மக்கள் அரசின் முதல் கடமையாக இருக்க முடியும் ; இருக்க வேண்டும்.

 

தலைமுறை தலைமுறையாக சமூக பொருளியல் காரணங்களால் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப்பெறாத சமூகத்தை சார்ந்த மக்களுக்கு, குறைந்தபட்ச கல்வியும் பிரதிநிதித்துவமும்  கொடுக்க வேண்டும் எனும் நிலையிலே ஒதுக்கீடுகள் இன்றளவும் தேவைப்படுகிறது. இவை சமூக சமன்பாட்டிற்கான முன்னெடுப்புகள். இப்படியான ஒதுக்கீடுகள் மூலமாக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று சொல்லுவோருக்கு, எந்தவித பாகுபாடும் இன்றி இன்றளவும் அரசுப்பள்ளிகளில்  எல்லோருக்கும் வழங்கும் இலவச கல்வியும், அதை தொடர்ந்து வழங்கப்படும் புத்தகம், உணவு போன்ற திட்டங்களுமே பதில்.,பள்ளி கல்வியை இலவசமாக கொடுத்தபின் எதற்கு ஒதுக்கீடுகள் என்ற கேள்வி வைக்கப்படுமானால்., தலைமுறை தலைமுறையாக தன் குடும்பத்திற்கான தினசரி வாழ்வியலுக்காக மட்டுமே  போராடும் மக்களிற்கு பிரதிநிதித்துவமும்,  உயர்கல்வி மற்றும் வாய்ப்புகள் பற்றிய புரிதல்களும், உளவியல் ஊக்கமும் ஒரே ஒரு  மாணவன் / மாணவி கல்வி பெற்றால் வந்து விடும் என்பது மொத்த இரவிற்கும் ஒரேயொரு மின்மினி பூச்சி போதும் போன்ற வாதமன்றி வேறில்லை.. ஆனால் இன்று அதே அரசு வழங்கும்  இலவச கல்வியும் பிரதிநிதித்துவமும் பெற்றுக்கொள்வோர் தன்னை தானே குற்றவாளி போல் எண்ண வைக்கும் பதிவுகளும் விவாதங்களும்  ஏதோ ஒரு வகையில் ஆதிக்க மனோபாவமே. அதிலும் அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியதாக உலாவும், “You prefer  your  reserved, we prefer your deserved” போன்ற வாசகங்களை கண்டு சிரிப்பதா வருத்தப்படுவதா தெரியவில்லை. மைக்ரோசாப்ட் , கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில்  எந்த மாதிரியான கல்லூரிகளில் இருந்து மாணவர்களை எடுக்கிறார்கள் என்பதையும், அந்த மாதிரி கல்லூரிகளுக்கு செல்ல தேவையான ( குறைந்தபட்சம்  கோச்சிங் கிளாஸ்ஸஸ் ) பொருளாதாரமும் , சமூக பின்புலமும் யாருக்கு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதையும் கடந்து இந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் பலரும்  வெளி நாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு பெரும் அளவிற்கு சமூக பொருளாதார பலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

 

தலைமுறை தலைமுறையாக சொந்தமாக வீடு, நிலம் என்று வாழ எந்த வித கட்டுப்பாடுமின்றி வளர்ந்த ஒருவருக்கும்  அவை மறுக்கப்பட்டு அவற்றை பேணுவதற்கு போராடும் ஒருவருக்கும்  இடையில் ஒப்பீடு என்பது தற்போதைய பொருளியல் மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது. மறுக்கப்பட்ட பின்புலத்திலிருந்து வந்த ஒருவர் கல்வியில் தோல்வியடைந்தால் அவரைத்  தாங்கிப் பிடிக்க, மாற்று வாய்ப்புகள் கொடுக்க அவர் குடும்பமும் சமூகமும் இல்லாத நிலையில், தோல்வியடைந்தாலும் தாங்கிப் பிடிக்க தேவையான  குடும்பமற்றும் சமூக பின்புலம் கொண்ட ஒருவர் அவற்றை விமர்சிப்பது ஆதிக்க மனநிலையன்றி வேறென்னவாக இருக்க முடியும்.. இதில் மிகப் பெரும் நகைச்சுவையே, அதே ஒதுக்கீடும், இலவச கல்வியும் பெற்று சமூக பொருளியல் படிநிலைகளில் முன் வந்தவர்களே அதே படியில் ஏறும்  இன்னொருவரை  இகழ்வதும் கேலி செய்வதும் தான்..

 

இதே நிலையில் தான் மருத்துவம், வாழ்விடம், உணவு போன்ற காரணிகளில் மானியம் இலவசம் என சமூக பொருளியல் அடிப்படையில் அரசால் இன்று வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. மாதம்  தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஓரளவேனும் மருத்துவ செலவுகளை தனிப்பட்ட முறையிலும் நிறுவனங்கள் வாயிலாகவும் பூர்த்தி செய்து கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.  அந்த வாய்ப்பில்லாதர்வர்களுக்கு அரசு அந்த காப்பீட்டை தர வேண்டியது கடமையாகிறது. அதே போல் இதிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம் என பலவும் கட்டணமின்றியும் குறைந்த கட்டணத்தோடும் எல்லோருக்கும் ஆனதாகவே அமைக்கப்பெற்றுள்ளது.

 

தனியார்மயம் அதிகமான இன்றைய  சூழலில், உணவு ்அதை சமைக்க தேவையான எரிபொருள் என எல்லாவற்றிற்கும் தனிப்பட்ட நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கும் நிலையில், அவற்றை சமூகத்தில் இருக்கும் எல்லா படிநிலைகளில் உள்ளோரும் பயன்படுத்துவதற்கு அரசின் சரியீடுகளாக மானியங்கள் தேவைப்படுகின்றன.  மாதம் 20000  30000 ஊதியம் வாங்கி, பல தலைமுறையாக சொந்த வீடு நிலம் கொண்ட ஒருவரையும், அதே ஊதியத்தை குடும்பத்தில் முதலாக அடைந்து சுயமாக வீடு நிலம் இல்லாதவரையும்,  முதல் முதலாய் வங்கி கடன் வழியாக வீடு நிலம் வாங்க எத்தனிப்பவரையும் தற்போதைய ஊதியம் ஒன்று தானே என்று  தராசில் சமம் என்று கொள்வது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது..இந்த மூவகை மக்கள் இடையே தேவைகளும் வாய்ப்புகளும் வேறுபடும் நிலையில், மாதம் வருமானம் அன்றாட செலவினங்களுக்கே தடுமாறும் நிலையில் இருப்போருக்கு வழங்கும் மானியம் , சரியீடுகள் கேலியாய் இழிவாய் சித்தரிக்கப்படுவது மரம் மேல் அமர்ந்து கொண்டு, மரம் ஏற தெரியாமல் கரடியிடம் இருந்த தப்பிக்க ஓடுபவனை கேலி செய்வது போன்ற மனநிலையே. இவை எல்லாவற்றையும் கடந்தும் கூட   பொருளாதார அடிப்படையில் சில வேறுபாடுகள் தவிர்த்து  உணவு,சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு அரசின் நேற்று வரையான மானியம் என்பது எல்லோருக்குமானதாகவே இருந்திருக்கிறது. இன்று மரத்தின் மீது ஏறி விட்டதால் , எல்லோரும் ஏறி விட்டார்கள் என்பது அடிப்படைவாதம் என்பதா இல்லை பரந்த பார்வையின்மை என்பதா., தெரியவில்லை. அப்படி ஏறிவிட்டோம் என்பவர்கள் தாராளமாக மானியங்களை மறுத்துக் கொள்ளலாம் ( அதெப்படி அவருக்கு மட்டும் குறைந்த விலைக்கு எரிவாயு உணவுப் பொருட்கள்? என்ற முதல் ஆளாய் போய் அவற்றைப் பெற்று கொள்வோர் அதை எதிர்பவர்களாகவே தான் இருக்கும் ).

 

இதே நிலையில் தான் வீடு, அடுப்பு இன்னும் பலவற்றை வழங்குவதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது..மாத தவணை முறையில்  வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவோரும், முழுப் பணம் கொடுத்து வாங்குவோரும், வாங்கவே இயலாத நிலையில் உள்ள மக்களும் இருக்கும் சமூகமிது.   அரசியல் ஆதாயத்திற்கு கட்சிகள் இவற்றை வழங்கின என்றே எடுத்துக் கொண்டாலும், அந்த பொருட்களை சுயமாக வாங்க முடியாத சமூக பொருளாதார கட்டமைப்பில் இருக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.  அவ்வாறான  மக்களுக்கு இவையெல்லாம் மக்களுக்கான சமூகம் சார்ந்த திட்டங்கள் தான்.அவர்களை சமநிலைக்கு கொண்டு வரும் திட்டங்கள் தான். இல்லை, இவை அனைத்தும் மக்களை சோம்பேறியாக்கும் திட்டம் என போதனை செய்தால், போதனை  செய்யும் எத்தனை பேர், அதே திட்டத்தின் வாயிலாக கொடுக்கப்பட்ட பொருளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறாமல் இருந்திருப்பார்கள் என்றால் பதில் மிகப்பெரிய வெற்றிடம் தான்.

 

சரி, இப்படியே எல்லா வரிப்பணமும் மானியம் என்றே ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு செலவிடுவது  எப்படி? என்பதே அடுத்த கேள்வி பலருக்கும். முன்னேறிய பட்டியலில் இருந்து கொண்டு தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தும் நாடுகள் பலவும் குறைந்தபட்சம்  கல்வி மருத்துவம் நீர் உணவு   போன்ற அடிப்படை வாழ்வாதாரத்தை சமரசம் செய்து எந்த திட்டத்தையும் அறிவிப்பதில்லை. இந்த நாடுகளில் சமூக பொருளாதார படிநிலைகள் நம் நாடு போன்று அத்தனை சிக்கல்கள் நிறைந்தவையாகவும் இல்லை என்பதே நிதர்சனம். தொழில்நுட்ப வளர்ச்சி சம விகிதத்தில் வளரவும் அனைத்து நிலையில் உள்ள மக்களும் தன்னிறைவு பெறவும் மக்கள் சேவை சார்ந்த விஷயங்களை அரசைத் தவிர்த்து தனியாரால் கண்டிப்பாக செய்ய முடியாது என்பதும் தெள்ளத்தெளிவான உண்மை. மிக முக்கியமாக தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம் தான், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லாமல் ஆடம்பரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் செய்யப்படுவதால் ஒரு சிலருக்கு மட்டுமே பயன். அரசு பெரும் ஒரு   ரூபாய் வரிப்பணம் கூட தேவைகளின்படி சரியான  விகிதம் பிரித்து பயன்படுத்துதலே ஆரோக்கியமான சமூக முன்னெடுப்பாக இருக்கும்..

 

கடைசியாக இத்தனை வருடம் இந்த திட்டங்கள் இருந்தும் ஏன் இந்த நிலை மாறவில்லை என்ற கேள்வி.,  இதற்கான பதில் இத்திட்டங்களை நிறுத்துவதிலில்லை மாறாக இங்கிருக்கும் அரசியல்  நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வதிலும் , திட்டங்களை ஆக்கப்பூர்வமான வகையில் ஒரு சமூகமாக வளர்ச்சியடையத் தேவையான முன்னெடுப்புகளை எடுத்தலிலும் தான் இருக்கிறது.இவை அனைத்திற்கும் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இருத்தல் மிக அவசியம். சமமான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் ஒரு சார்பு மக்கள் மட்டுமே அதிகாரத்தில் இருந்க்கும் பட்சத்தில், இந்த வேற்றுமைகள் மாறுவது சாத்தியமற்றது, . இல்லை இப்பொழுதும் இந்த திட்டங்களை நிறுத்துவது தான் பதில் என்றால், ஏரியை தரையோடு தரையாய் மாற்றி அதன் மேல் செயற்கை  நீச்சல் குளம் கட்டுவதுபோன்ற வளர்ச்சியே மிச்சம்..  தரையோடு தரையாக மாற்றும் செயல்முறையில் நசுக்கப்படும் உயிரினங்களாக மட்டுமே சாமானிய மக்கள் மிஞ்சுவார்கள்., ஒரு சிலர் மட்டுமே உல்லாச நீச்சல் அடிப்பார்கள்.

Posted in #SriScribbles, Politics, Society

ரசிகனாகிய நான்

சமூகத்தின் பிரதிபலிப்பு கலையா? இல்லை கலைகளின் பிரதிபலிப்பு சமூகமா? என்பது கோழியா முட்டையா போன்ற ஒரு முடிவில்லா கேள்வி. ஒரு புள்ளியில் இந்த கேள்விகள் இணைந்தே தீர்கின்றன அல்லது குறைந்தபட்சம் உரசிக்கொள்கின்றன. நம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதோ ஒரு வகை கலை உடன் பயணித்துக் கொண்டிருந்திருக்கும். இசை, பாடல், புத்தகம், படம் என.

 

நமக்கு அந்நியமான ஒருவருடன் பேசுவதற்கோ, பழகுவதற்கோ கூட கலைகளும் அதன் மீதான ரசனை மனோபாவமும் பல நேரங்களில் பாலங்களாக அமைவதுண்டு. யாரென்றே தெரியாத இருவரால் கலை , ரசிக மன நிலை இரண்டு கொண்டு மட்டுமே ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எல்லைகள் தாண்டி, நமக்கு சற்றும் தொடர்பில்லா இலக்கியங்களையும் தனதாக்கிக் கொண்டாடும், அதனூடே வேற்றுமைகளைத் தாண்டிய ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் மனம் கலைகளினாலே சாத்தியம். கலைகளுக்கு அடுத்ததாக விளையாட்டும் இந்த வரிசையில் வந்து சேர்கிறது எனினும், கலை ஏற்படுத்தும் இணக்கம் விளையாட்டால் ஏற்படுத்த முடிவதில்லை எல்லைகள் நிறைந்த இவ்வுலகில்.

 

மனித சமூக பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் கட்டமைக்கப்பட்ட பல நூறு வரைமுறைகளும், கருத்தியல் வேற்றுமைகளையும் தாண்டி மக்களை இணைக்கும் சங்கிலியாக கலைக்கூறுகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். ஆண்டாண்டாக கட்டியமைக்கப்பட்ட வரையறைகளை அறுப்பதும், வேற்றுமைகள் கொண்ட கருத்தியல்களை ஒன்றாய் கோர்ப்பதும் கலை வடிவங்களால் மட்டுமே நடந்திருக்கின்றன. மக்களின் எழுச்சி, ஒன்று கூடல் என வேற்றுமை கடந்த சமூக முன்னெடுப்பின் ஆரம்ப புள்ளியும் கலை வடிவங்களாகவே இருந்திருக்கின்றன.

 

கலை இன்றைய நிலையில் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை கண்டுள்ள வேலையில், மக்களை ஜாதி மத இன வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைக்கும் ஆற்றலுடனே இன்றும் பயணிக்கிறது. பல்வேறு மாறுபட்ட கருத்தியல்கள் கொண்ட மனிதர்களை இணைக்கும் புள்ளியாகவும் கலை இலக்கியங்கள் இன்றும் இருக்கின்றன. ஒற்றை மதம். ஒற்றை மொழி, ஒற்றை இனம் ஒற்றை கருத்தியல் என்று தன்னிலை ஒருமை மட்டுமே பேசும் மக்களையும் ஒரு கணம் வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

 

இந்நிலையில், கலைத்துறையில் இருந்து மக்களரசியல் பேசும், பழகும் ஆளுமைகள் உருவாவது ஆரோக்கியமானதாகவே இருக்க முடியும். கலை என்ற நிலையில் இசை, இலக்கியம், நாடகம் (சின்னத்திரை, வெள்ளித்திரை உட்பட) என்ற எல்லாமும் அடக்கம். அவ்வாறு உருவாகும் ஆளுமைகள் மக்களின் மனம் பேசும், வேற்றுமைகளை இணைக்கும் பாலமாக இருப்பின் அரசியலில் ஈடுபடுவதில் எந்த தவறும் இருக்கப்போவதில்லை. அதே நேரம், மக்கள் மாண்பை புறந்தள்ளி அதிகார, பொருளாதார பயனிற்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொன்றும் யாராயினும் தோற்கடிக்கப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை. எந்த ஆளுமையாக இருப்பினும், சமூக சமன் நிலைக்கும் , மக்கள் வாழ்வியல் அமைதிக்கும் எதிர்வினை ஆற்றும் பொழுது கண்டிக்கப்பட வேண்டியதும், கேள்விக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அவ்வாறான கேள்விகளின்றி “கூத்தாடி அரசாளக்கூடாது” போன்ற விமர்சனங்கள் கொண்டு தான் கேள்விகள் கட்டமைக்கபடும் எனில் பிரச்சனை நம்மிடம் தான் உள்ளது. வேற்றுமைகள் தாண்டி மக்களை இணைக்கும் ஆளுமைகளை எல்லாம் 1௦௦ சதவீதம் அற்ற கருத்தியல், கொள்கை என்று புறக்கணிக்க நினைத்தால், ஜனநாயகம் என்று நாம் கூறும் அரசியலின் அர்த்தமே பொய்த்து விடுகிறது. நடு நிலையும், எல்லா வேறுபட்ட கருத்தியலையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவமும் ஏற்படுத்திக் கொள்பவர்களை எல்லாம், தன் கருத்தியலோடு நூறு சதவிகிதம் ஒன்றுபடவில்லை என்ற காரணத்திற்காக சிறுமைபடுத்துவது பிற்போக்கின்றி வேறில்லை.

 

சமூக சிக்கல்கள் பல பின்னிப்பிணைந்து இருக்கும் சமூகத்தில், முற்போக்கு அரசியல் கூட வாக்கு வங்கி அரசியலுக்காக ஜாதிய சார்புக்கு தெரிந்தோ தெரியாமலோ தள்ளப்படும் நிலையில், பெரும்பாலும் ஜாதிய மத வேறுபாடுகளற்ற ரசிக மனோபாவம் மேலானதாகவே தெரிகிறது.

Posted in #SriScribbles, Politics, Society

அரசியல் சூழ் சமூகம்

விவாதங்களும் உரையாடல்களும் தான் ஜனநாயகத்தின் அடிப்படை அரசியல் நகர்வு என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஒரு சாமானியனின் கருத்தாகவே இந்த பதிவு இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. உரையாடல்களில் தொடங்கி, விவாதங்களில் பயணித்த பின்பே அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு வரலாறே சான்று.. கருத்துகள் மிகவும் வலிமையானவையும் கூட.. எதையும் உள் நிறுத்தும் வெளியேற்றும் ஆற்றல் கருத்திற்கு உண்டு.. இருப்பினும் எல்லாக் கருத்துகளும் அவ்வாரனவையே என்று ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. சில நேரங்களில், கருத்துகளையும் தாண்டி, தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளும் கருத்துருவாக்கத்தை பலவாறாக ஆட்கொள்கிறது என்பது மிகவும் கவனம் கொள்ள வேண்டிய ஒன்றாக தோன்றுகிறது..

 

discussions

 

சமூக வலைதளங்களின் பரவும் ஆற்றலும் , ஜல்லிக்கட்டுக்காக எழுந்த சுய எழுச்சியும் இன்றளவில் அரசியல் விவாதங்களில் இருந்து விலகியிருக்க பழகியிருந்த மக்களையும் அரசியல் பேச வைத்துள்ளது ஜல்லிக்கட்டு எழுச்சிக்கான வெற்றியன்றி வேறில்லை..ஆனால், இன்று அதே அரசியல் மற்றும் சமூக விமர்சனம் / உரையாடல்கள், அரசியல் புரிதல்களுடனும் அரசியல் நாகரீகத்துடனும் உள்ளதா என்பது சந்தேகமே..

எந்த ஒரு அரசியல் / சமூக நிகழ்விற்கும் எதிர்மறை கருத்தாகாவும், விமர்சனமாகவும் தனி மனித தாக்குதல்கள் அதிலும் அவர்களின் தோற்றம் மற்றும் இக்கால முற்கால வாழ்க்கை முறை போன்றவற்றை இழிவுபடுத்துவது மிகவும் வேதணை..இது ஒரு வகை மேலடுக்கு மனோபாவத்தை மட்டுமே வெளிபடுத்துகிறது என்பது நிதர்சனம்.. இந்த வேலை உயர்ந்தது, இந்த மாதிரியான தோற்றம் தான் அழகு, இவை இழிவானவை என நமக்கே அறியாமல், சமூகத்தாலும் சமூக ஜாதிய ஆணவ கட்டுமானத்தாலும் நம்முள் புகுத்தப்பட்ட கருத்தின் விளைவாகவே இவற்றை பார்க்க முடிகிறது.. சமூகத்தை சமமாக கருத இயலாத, குறைந்தபட்சம் எவரையும் அவர் தோற்றம் வாழ்க்கை முறை ஆகியவற்றால் கொச்சைப்படுத்தும் கருத்தியல்கள் எந்த விதமான ஆக்கபூர்வ முன்னெடுப்புகளையும் ஏற்படுத்தாது..

ஒருவரை கேவலபடுத்துவதற்கும் தரக்குறைவாக பேசுவதற்கும், விமர்சிப்பதற்கும் வேறுபாடுகள் ஏராளம்.. தெளிவான கருத்துருவாக்கத்திற்கும் அரசியல் நோக்கிற்கும் இந்த புரிதல் மிகவும் அவசியம்.. அல்லாமல், யாரையும் தாழ்த்தி பேசுவது கேளிக்கை கலந்த வெறுப்பு அரசியலையும் விரக்தியை தவிர எந்த வித பெரிய தாக்குதலையும் தருவதில்லை ஒரு சாமானியனிடம்..

அடுத்ததாக, கோபங்களும் முனைப்புமே அரசியல் மாற்றங்களை எதிர்நோக்கும் என்றாலும், முனைப்பும் கோபமும் மட்டும் நாம் விரும்பும் அரசியல் நிலையை சமூகம் அடைய உதவுமா என்றால் கேள்விக்குறி தான்.. அரசியல், சமூக அமைப்பை பற்றிய புரிதல்களும், தேடல்களும் அவற்றிலிருக்கும் தவறுகளை உணர்வது போன்றவையுமே நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை கொடுக்க முடியும்..இவை அனைத்தும் ஓர் இரவில் நிகழ்வது அல்ல, இது ஒரு செயல்முறை..அது அறியாது இன்றே எல்லா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் அரசியல் அமைப்பை வேரோடு மாற்றுவோம் என்பதெல்லாம் தொலை தூர கானல் நீராகவே நமக்கு அமையும் என்பதும் வரலாறு விட்டு சென்றிருக்கும் மிக பெரிய படிப்பினை..

Pics : Googled

Posted in #SriScribbles, Politics, Technology

Money and the shades

Though I am no economist to comment or criticize on an economic policy with technical rigor, I do have a common understanding of common people being one among them. This is a perception of that common view and understanding.

 

No doubt that corruption and black money are one of the issues faced by India and its people as a country. It is required to device plans to unearth those. But are unearthing process just easy like a tense climax of a cinema? My little conscience says it otherwise.

 

The strategy of replacing the old money with new one is a good move to control bogus notes. Doing it with immediate effect does provide a way to negate all possible circulating bogus currencies. And, replacing currencies with newer ones has been in practice every few years for various reasons including eradicating bogus currencies making it not the first of its kind (Overnight change being the difference!).

 

500_1000

 

The next suggested expectation out of this particular move is to unearth or invalidate the black money hidden in darkness. This quite looks good an intention and bold move at the onset, but it very much has its own adverse effects.  First and foremost, what does this target as black money? Does it refer to the high end money laundering deposited in foreign accounts or the savings of average to low income people without receipts? Does it refer to all the assets and holdings named after Benamis or the common people having earned money through selling milk, or other household activities without bill? Does it look into people who are sophisticated enough to swipe of cards for expense or the people who find it hard to maintain a bank account and manage their own savings? The list goes on.

 

To exactly quote the finance minister

“”If the money is legitimate which had been previously withdrawn from bank or earned legally and saved and had been disclosed, there is nothing to worry about,”

“The small amounts that people will deposit like INR 25,000, 30,000 or 50,000 lying in house for expenses, whatever money could be there for meeting normal family expenses they need not worry. They can go to banks,”

Which very much is a contradiction of each other statement.

 

It is also noted that, any amount greater than INR 4000 will be only deposited into respective bank accounts. According to statistics as of 2015 April, there are around 40 % people in India without bank accounts. Even if there is a 10 % hike in this numbers by now, still there is a lag of 30% population without bank accounts. 43 % of such open bank accounts are dormant accounts (with nil activity), highest of its kind in the world. And out of all the account holders, only 39 % possess the knowledge to use or use an ATM card. There are n number of reasons for the 39% which is not just money laundering.

 

With all these data, I believe that the common people with an average to low earning and who are ignorant to technology still account to a great share in our society. So, it is even more important to educate people with the banking requirements before pulling of a drastic decision. The most possible response for the above statement from supporters would be the fact that “People were advised for the past year to open a bank account and use using various governmental measures”. Yes, that is true. But is it satisfying for to have a campaign just to ask people to create accounts? Or is it necessary for the government to educate people and address all complexes they possess over banking and move them smoothly towards it?

 

Finally, the immediate effect on the common people is of a greater concern. 4 hour time is never enough for a near 130 crore population to stock up with required change to tackle the situation. It is easy to argue on the element of surprise cultivated by the sudden decision, but that would least challenge big shots who hold money as various assets more than liquid cash. Yes, it may target middle level launderers but along with it challenges the very routine of small scale businesses like a retail shop of their hard earned money. And situations of people in travel, people with celebrations around, people staying away from home is a question of its own. Though routed as 2 days sacrifice for the betterment of greater good by the government. The sacrifice is really asked from the people at grass roots, not from the sophisticated bunch in comparison.

 

Overall, a bold move but taken with an autocratic decision making and a bottom up approach, challenging big corporate laundering the least and an average man the most is what makes the decision disappointing. Yes, we need a transparent banking system and this eyes an example, but the example should be set from the elite society rather than affecting and challenging the common people first.

 

References :

Hindu article on bank account stats

 

Finance minister interview coverage on Times of India