Posted in #SriScribbles, Rain, Society

மழையா கேள்விகளா!?

mazhai_kelvi

மழை., மழை., மழை இது தான் கடந்த இரண்டு மாதங்களின் மிகப் பெரிய தாக்கமும் ஏக்கமும்.. மழை வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து மெல்ல மீளத் தொடங்கிய நாள் முதலாய், பல விவாதங்களும், செயல் திட்டங்கள் வரைவும் நடந்த வண்ணம் உள்ளன..அப்படியான பலவற்றுள் அகரம் – The Hindu – புதிய தலைமுறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “யாதும் ஊரே – இணைவோம் இணைப்போம்” பயிலரங்கு மற்றும் சந்திப்பிற்கு செல்லும் வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது..

பயிலரங்கிற்கு செல்லும் முன்பே பலரிடம் இருந்தும் பல விதமான கருத்துகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்ட நிலையில் தான் சந்திப்பிற்கு நானும் என் நண்பர்கள் சிலரும் சென்றோம்..இரு நாள் சந்திப்பாக நடந்த நிகழ்வில், முதல் நாள் சற்று தாமதமாகவே சென்றோம்..தமிழருவி மணியன், ராஜேந்தர் சிங்க் ஆகியவர்களின் பேச்சுக்களுடன் தொடங்கிய முதல் நாளின் முற்பகுதி மழை வெள்ளம்., அதன் காரணி., என பள்ளியில் படித்த, கேட்ட பாடங்களின் மறு ஒளிபரப்பாகவே தோன்றியது..முதல் நாளின் பிற்பகுதி சற்று கார சாரமான விவாதங்களுடன் அரங்கேறியது..கோவை சதாசிவம், பியுஷ் மனுஷ், சுந்தர் ராஜன் போன்ற சுற்றுசூழல் ஆர்வலர்களும் கழிவு மேலாண்மையில் புதிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் உரையாடல்கள் பல வருடமாக எடுத்துரைத்தும் செவி கொடுக்க மறுத்த அரசு மற்றும் மக்களின் மேலான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்தது..அங்கு அமர்ந்திருந்த பலருக்கும் உரைத்துமிருக்கும்…

முதல் நாளின் பிற்பகுதியில் ஏற்பட்ட “உரைத்தல்”ன் காரணமாகவோ என்னவோ இரண்டாம் நாள் குறித்த நேரத்திற்கு சென்றோம்..இன்றைய சூழலில் நீர் மேலாண்மை, தன்னார்வலர்களின் பங்கு எனத் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற தளங்களில் கோவையில் இயங்கி வரும் சிறு துளி அமைப்பின் எடுத்துக்காட்டுகளுடனும், பேரா. கல்யாணி , பாரதி கிருஷ்ணகுமார் போன்றோருடைய அனுபவ பகிர்வுகளுடனுமாக பயணித்தது இரண்டாம் நாள்..

அந்த இரண்டு நாட்களில், பல பதில்களும் பல கேள்விகளும் என்னுள்..,

மழை வெள்ளம் சமூக ஏற்றத் தாழ்வுகளை, சாதி மத பிரிவினைகளை உடைத்து எரிந்தது என்று பல முறை மேடை ஏறி பேசிய ஒருவரேனும், நிகழ்வில் VIP அமர்வு என்று தனித்து அமைக்கப்பட்டது ஏன் என்று யோசித்திருபார்களா என்பது சந்தேகமே!( ஒரே அமர்வாக அமைப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பினும் ஏனோ மனம் அதை ஏற்க மறுத்தது).. இரண்டு நாள் சந்திப்பில், பெரும்பாலான நேரம் எது கூடியது எது கூடாதது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான உரையாடல்களாக அமைந்தது,மக்களிடம் ஏற்படுத்த பட வேண்டிய விழிப்புனர்வுகளின் அவசியம் மறுப்பதிற்கில்லை என்றாலும் அரசு மற்றும் தனியாரின் தவறுகளின் மேல் உள்ள பார்வையை தளர்த்துவதாக தோன்றியதையும் மறுக்க முடியவில்லை.. சிறு துளி அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் 2003 இல் வறட்சியை எதிர் நோக்கி இருந்த கோவையின் நீர் நிலைகளையும், சுற்றுப்புற சூழலையும் மீட்டு எடுக்க செய்த வழிமுறைகளை பகிர்ந்த பொழுது கவனமாய் கவனித்த சிந்தை, அவர்கள் சீரமைத்த பல நீர் நிலைகளுள் ஒன்றின் சீரமைப்பில் coca-cola நிறுவனத்தின் CSR உம் உதவியாக செயல்பட்டது என்ற பொழுது அது வரை உரையாடலின் மீது இருந்த ஈடுபாடு குறைவதை தடுக்க முடியவில்லை..ஆக்கிரமிப்புகள் மற்றும் புலம்பெயர்த்தல் போன்றவை பற்றிய கருத்துகள் மிகவும் கவனமாக வைக்கப் பட்டதும், மொத்த சந்திப்புமே சற்று பாதை மாறி செல்கிறதோ என்று நினைக்கத் தூண்டியது. நாம் சேர்ந்து இயற்கையையும், நீர் நிலைகளையும் பேணி காப்போம் என்று சொல்லும் ஒவ்வொரு பொழுதும் உத்வேகம் பிறந்தாலும், அப்படியானால் அரசின் பங்கு தான் என்ன என்ற கேள்விக்கு பதில் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஆக்கிரமிப்பு (அரசு, தனியார் நிறுவனங்கள், மக்கள்) , நீர் நிலை மற்றும் சசுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் அரசாங்கத்தை முனைப்புடன் செயல்பட தூண்டுவதும் நிர்பந்திப்பதும் அவசியம் என்பதை கருவாய் நேரிடையாக கொள்ளாதது சரியான அணுகுமுறையா என்று தெரியவில்லை..

இப்படியான பல எதிர்மறை கேள்விகளுக்கும் , சந்தேகங்களுக்கும் விடையறிய நினைத்த நேரங்களில் அங்கு கலந்துரையாடிய இருவரின் பேச்சு, ஒரு சில தெளிவுகளைக் கொடுத்தது..முதலாக,, பேரா. கல்யாணி அவர்கள், ” பல நேரங்களில் எல்லாரையும் ஒரு கூட்டமைப்பாக அமைப்பது மறுக்க முடியாததாக அமைகிறது, அதுவே எல்லாருடைய ஈடுபாட்டை பெற உதவும்” என்றதும்., coca -cola என்ற ஒற்றை பெயருக்காக சிறு துளி மீது ஈடுபாடு குறைந்த அளவில், பாரதி கிருஷ்ணகுமார் ” சிறு துளியினர் உங்களுடன் பகிர்ந்த முதல் மற்றும் கடைசி slide இல் நம்மால் காண முடிந்தது வறண்ட நிலம் வளமையானது மட்டும் தான்.,கடந்த 15 வருடங்களில் சிறு துளி சந்தித்த சவால்களும்,இழப்புகளும் slide களுக்கு நடுவே மறைந்து இருப்பது..உயிர் மற்றும் மன இழப்புகளுக்கு பின் அடைந்த நிலை தான் இவை” என்ற பொழுதில், ஒரு நொடி ஒரு தகவலை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரையோ, அல்ல ஒரு குழுவின் குறிக்கோளை முடிவு செய்வது சரியா என்று எனக்குள் என்னையே கேட்க தொடங்கியது..பாரதி கிருஷ்ணகுமார் கூறிய தகவலை தொடர்ந்து முதலில் ஏற்ப்பட்டது உணர்ச்சிப்பூர்வமான சிந்தனை தான் என்றாலும் சற்று நிதானமாக யோசித்தாலும், நாம் அறிந்த அல்ல பார்த்து கேள்வி பட்ட சில ஒத்து வராத காரணிகளுக்காக முழு நோக்கத்தையும் கேள்விக்குள் கொள்வது சரி என்று தோன்றவில்லை..

விமர்சனங்கள், எவரானாலும் எந்த அமைப்பாக இருந்தாலும் இருத்தல் அவசியமே.. இருப்பினும் விமர்சனங்கள் தீர்க்கமான தீர்ப்பு போல் அமைந்து விடாமல் இருப்பதும் அவசியம்.. அதே போல் இது போன்ற அமைப்புகளின் மீது விமர்சனங்கள் இருப்பின், வெறும் எதிர்மறை கருத்துகளை வைப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை அருகில் இருந்து அவற்றுடன் சரி செய்ய வைப்பதும் அவசியம் ஆகிறது..இரண்டில் ஏதேனும் ஒன்றை மறந்தாலும் பயன்பாடும் பயனும் கேள்விக் குறி தான்..ஒருவருக்கு ஒருவர் விமர்சகராக சமூக நலனுக்காக எடுத்து வைக்கும் அடிகள் மட்டுமே ஓரளவேனும் விடைதரும் என்பது மட்டும் நிதர்சனம்..

#யாதும்ஊரே #yaadhumoore #chennairains

Advertisements
Posted in Politics, Rain, Society

மழையுதிர் காலம்

ஒரு கன பொழுது செய்வது அறியாது வெளியேறினால் போதும் என்ற நினைப்புடன் சென்னையை விட்டு தற்காலிகமாக வெளியேறிய என் மீது எனக்கே உள்ள விமர்சனத்தோட கூடிய பல கேள்விகளுடன்.,

மழை, இயற்கை, மனிதம், அரசியல், விளம்பரம், மேலாண்மை என்று விரிந்து பரந்த பல தளங்களை தொட்டு சென்ற ஒரு காலமாக அமைந்து விட்டது இவ்வருட பருவ மழைக்காலம்.. மழை, வெயில் என இயற்கையின் எல்லா அம்சங்களையும் தனதாக்கிக்கொண்டு அரசியலும் விளம்பரமும் செய்து கொள்ளும் திறமை கொண்ட மனிதர்களாக நாம் மாற்றம் அடைந்து இருப்பது இயற்கையின் பரிமாண வளர்ச்சியில் ஏற்பட்ட தவறா இல்லை மனிதத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளியின் மற்றுமொரு விரிசலா? என்று முடிவு செய்வது சற்று கடினமான ஒன்று.. மழை எதிர்பாராத அளவுக்கு பெய்ததால் வந்த இழப்பு என்று ஒரு தரப்பும், நீர் மேலாண்மை – நகர திட்டமிடல் – இயற்கை சுரண்டல் போன்றவற்றின் குறைகளின் எதிரொலியே இந்த பாதிப்பு என்று இன்னொரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் குற்றம்சாற்றிக் கொண்டு இருக்கும் சூழலில்., இதில் பாதிக்கப் பட்ட, தோல்வியடைந்த முழு சமூகத்திற்குமான பதில்களும் சமாதானங்களும் நீண்ட கேள்வி குறிகளாகவே சாமானிய பொது மக்கள் முன்..

தண்ணீர் கொண்டு நடத்தப்படும் அரசியலை கிட்டத்தட்ட எல்லா ஆட்சிக் காலங்களிலும் கண்ணெதிரே கண்டு பழக்கப்பட்டு., ஒவ்வொரு முறையும் மழை பொழியும் நேரங்களில் கடலிலும் தெருக்களிலும் கழிவு நீரிலும் கலக்கும் தண்ணீருக்காக ஆதங்கப்படும் ஒரு சாதாரண குடி மகனின் மாற்று பார்வையை முன்னிருத்துமா இந்த மழை காலம் என்பதற்கு பதில் தான் இல்லை.. ஒவ்வொரு முறையும் மருந்து கொடுத்து நோயை சரி செய்ய முனையும் தாயானவள் கசப்பு மறைய தரும் சர்க்கரை, மருந்தை முந்துவதைப் போல., பிரச்சனைகளுக்கான தொலைதூர அரசியல் விளக்கங்களையும் திட்டங்களின் தேவைகளையும் நிவாரணம் என்ற பெயரில் கொடுக்கப்படும் 5௦௦௦ , 1௦௦௦௦ ரூபாய் மறைத்து விடுவது அரசியலின் புரிந்த கொள்ள முடியாத முடிச்சுகளில் ஒன்றா இல்லை சமூகத்தின் அறியாமையா என்பதும் நீண்ட கேள்விகள் வரிசையில் பதில் இல்லாத ஒன்று.. வெள்ளம் வரட்சி போன்ற சூழலில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி தேவை நிவாரணங்களே தான் என்றாலும், நிவாரணங்கள் மக்களின் அந்த கன கவலைக்கான ஆதரவாக இருப்பதை விடுத்து , அடுத்த கட்ட திட்டங்களை மறைக்கவும் தேர்தல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தப்படும் நிலை வேதனை..

மக்களுக்கு தேவையான உடனடி தேவைகளில் கூட விளம்பரம் தேடிக்கொள்ளும் அளவிற்கு நம் அரசியலும், சக மக்களின் கவலையிலும் அவர்களுக்கு உதவுவது போல புகைப்படம் எடுத்து வெளியிடும் selfie களும் photo களும் நம்முடன் நாமே தனிமையில் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள்..”Fittest Of the Survival” , என்று டார்வின் கூறியதாக படித்தபொழுது ஏற்றுக் கொண்ட மனது, இன்று அது ஏன் பொய்யாக இருக்க கூடாது என்று எண்ணும் வண்ணம் அரங்கேறிய வழிப்பறிகளும், திருட்டுகளும், சந்தர்ப்பவாதங்களும் பொறுமையின் எல்லையை சோதித்த, என்றும் சோதிக்கும் கேள்விகள்.. அவர் ஏன் உதவவில்லை, இவர் ஏன் ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்ற பொய்யான ஒரு எதிர்பார்ப்பும், யார் என்ன செய்தார்கள் என்று ஒப்பிட்டு பார்ப்பதும் நாம் நம் மீதே வைத்துக் கொள்ளும் சந்தேகங்களாகவே அமைகிறது.. பொது மக்களிடம் எளிதில் சென்றடையும் சினிமா, விளையாட்டு போன்ற துறையை சார்ந்த மக்கள் மிக சுலபமாக மற்றவரின் விமர்சனங்களில் சிக்கி விடுவது பலமா பலவீனமா என்பது புதிர் தான் ( இருவருக்குமே).. அவர்களின் செயல்பாட்டுக்கு ஆனந்தப்படுவதும் , செயல்பாட்டின்மைக்கு வருந்துவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள உள்ள எளிய வழிகள் என்பதை மீண்டும் நீருபித்திர்கிறது இன்றைய காலம்..

சமூகம் பற்றிய பார்வை இல்லை, வாழ்க்கை மீதான பொறுப்பு இல்லை என்றெல்லாம் நாள் தோறும் பல கேள்விகளின் நடுவில் தொலைபேசியும் வலைதளமும் துணையாய் வளம் வந்த ஒரு பெரும்பட்டாளம் பங்கு கொண்ட நிகழ்வுகள் அரசையும் மற்ற நகர ஊடகங்களையும் சற்று திகைக்க வைத்திருப்பது, ஒரு புது ஊக்கம்.. இது அரசியல் புரட்சியா? மாற்றமா? என்ற கேள்விக்கான பதில்,சற்று தொலைவான நினைவுகளாகவே பொருத்திக்கொள்ள வேண்டிய அவசிய தேவை.. பெரும்பாலான உணர்ச்சிவசத்தினால் ஆன வெளிபாடுகளைத் தாண்டி ஆழமான பார்வையும் சாமானிய மக்களுடனான தொடர்புமே மாற்றத்தின் ஆழத்தையும் வெற்றியையும் தீர்மானிக்கும் கருவிகளாய் அமையும் என்ற நிதர்சனத்தை ஏற்று கொள்ள வேண்டியது மிக அவசியம்..

நீர் – இயற்கை மேலாண்மை, நகர திட்டமிடல் போன்றவற்றில் தேவையான அதே முனைப்பும் கேள்விகளும் அவரவர் மீதும் தன்னை சுற்றியிருக்கும் சமூகம் மீதும் என்றும் கொள்ளவதே சீரான ஒரு வாழ்வியலில் நம்மை நகர்த்தி செல்லும் என்பதை பல வகையில் உணர்த்திய இந்த காலம் என்றும் மனதில் “மழையுதிர் காலமாய்”!

Posted in Rain, Society

மனதோடு மழை..

 

வருடம் முழுவதற்குமான தாகத்திற்கும் வெறுமைக்கும் ஆறுதல் அளிக்கும் மழை என்பதால் தானோ என்னவோ எல்லா வயதுடையவர்களையும் எல்லா வாழ்வியல்களில் உள்ள அனைவரையும் ஒரு சேர கவர்ந்து விடுகிறது மழை.. மழை பொழியும் பொழுது நிலவும் ஓசைக்குள் இருக்கும் அமைதி பல அழகிய நினைவுகளை தந்து செல்கிறது..

 

mazhai

 

சிறு வயது மழை நேர காகித கப்பல் பயணம்., தண்ணீர் குட்டைகளை தேடி தேடி குதித்து சென்ற வெற்றி நடைகள்., அம்மா செய்து தரும் வெங்காய பக்கோடாவின் ருசி., என்று அராம்பித்த மழையுடனான அழகிய நினைவுகள் ஒவ்வொருவருக்கும் மிகவும் நெருக்கமானவை.. மழை நேர தேநீர்., இசை., புத்தகம்., பிடித்த படம் என வளர்ந்த மழையுடனான உறவு என்றுமே இதமனதாகவே அமைந்த ஒன்று.. மெல்லிய மழை சாரலுடன் சாலை ஓரங்களில் நடந்து செல்லும் அனுபவம் புத்துணர்வானது.

ஆனால் இன்றோ, “நம் நாட்டுக்கு என்னதான் ஆச்சு” என்கிற அளவிற்கு மழையுடனான தொடர்பில் ஒரு விரிசலோ என்ற சந்தேகம் எனக்கு, என் மேலும் தான்..இவற்றிற்கு பல காரணங்கள் என்றாலும், பொதுவாக மழையில் நனைதல் பிடிக்கும் என்பவர் கூட இன்று தயங்க மிக பெரிய காரணியாக இருப்பது, நம்மில் ஒரு அங்கமாகவே மாறிப்போன கைபேசி போன்ற பொருட்கள் தானோ என்று தோன்றுகிறது! இவை கூட, ஒரு சில நேரங்களில் தான் தடையாக இருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் மழையையே வேண்டாம் என்ற எண்ண ஓட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கும் இன்றைய நம் அடிப்படை வாழ்வியல், இயற்கையிடமிருந்து நாம் விலகி செல்வதின் நேரடி சாட்சி.. வரவேற்று கொண்டாடிய மழையை கண்டு பயந்து ஓடி ஒளியும் நிலைக்கு யார் காரணம் என்ற கேள்வியே கேள்விக்குறி தான்..பொரிளியல் மாற்றங்களைத் தாண்டி மக்களின் மிக அடிப்படை வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றியிருக்கும் இன்றைய சூழல் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வினாத்தாள்..

காரணங்களும், பதில்களும் நீண்டு கொண்டே போகிறது என்றாலும், சில அடிப்படை புரிதல்களையும் பழிகளையும் நம்மால் மறுக்க முடியவில்லை என்பது உண்மை.. நீர் நிலைகளின் அழிவிற்கு காரணம் மெத்தன போக்கில் கை விட்ட அரசா? இல்லை பேராசை வர்த்தகமா? இல்லை எனக்கும் என் வீட்டிற்க்கும் பிரச்சனை இல்லாதவரை கவலை இல்லை எனும் நம் மனநிலையா?.. இவை மூன்றுமே தான் என்ற ஒப்புதல் மட்டுமே எதிர்காலத்திற்கான குறைந்தபட்ச தீர்வை தரும்..

ஊரை விட்டு உறவை விட்டு தனித்து சம்பாதித்து சிறப்பு என்று நினைத்து வாங்கிய வீடு எரியாய் நிறைந்து நிற்பதை கண்டு கலங்கும் மனிதனிடம் இயற்கை, நீர் மேலாண்மை என்று பேசுவது எந்த அளவிற்கான தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்பது மிக பெரிய வினா.. ஒரு குறிப்பிட்ட நிலத்தை வளர்ச்சி என்ற பெயரில், அதன் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மைக்கு நகர்த்தி செல்லும்படியான திட்டங்களை தீட்டுவது அரசின் மிக பெரிய தோல்வியாகவே இருக்க முடியும்.. இதற்க்கு பல உதாரணங்கள்! சென்னையைஅடுத்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் இதற்க்கு மிக பெரிய சான்று, காடுகளா? எங்கே என்ற ஆச்சர்யம் அடங்குவதற்குள் அடுத்த பருவ மழையே வந்து விடும்..

காடுகள் காணாமல் போனது போல் ஏப்பம்விடப்பட்ட ஏரிகளும், ஆறாத ரணத்தோடு ஓடும் ஆறுகளும், அறை குறை மனித வளர்ச்சியின் மிச்சம் என்பதை உணர்த்த பேரிடர் தேவை இல்லை சரியான பருவமழையே போதுமானது என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது மழை.. அன்பாய் வாரி வழங்கிய மழை இன்று கண்டிப்புடன் கூறிய ஒரு பார்வையாகவே இன்றைய மழையை காரணம் கூறி நமக்கு நாமே ஏற்படத்திக் கொண்ட இடர்களை பார்க்க முடிகிறது.. இதற்க்கான தீர்வாய் அரசும், மக்களும் இரு சக்கரமாய் சுழல வேண்டியது மிக அவசியம்..

மழையையும் இயற்கையையும் வாழ்வியலாக நாம் ஏற்று செல்லும் நாள், “மழை வருது மழை வருது குடை கொண்டு வா!” என்பதில் மழையே குடையாகும் !

 

 

Image Source : http://www.smashingmagazine.com