Posted in #SriScribbles, Society

மருத்துவமும் எதிர்வினையும்

மரபு அல்லது இயற்கை மருத்துவத்தை கேள்வி கேட்பவர் யாவரும் ஏதோ இயற்கைக்கு எதிரானவர்கள் போலவும், சர்வதேச மாபியா கும்பலின் அங்கம் போலவும் எண்ணி பதிலளிப்பது வியப்பாக இருக்கிறது.

இன்று விமர்சனங்கள் வைக்கும் பலரும் நம்மாழ்வார், உதயகுமார் என பலருடைய பல நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களே. இன்றளவும் அணு உலை எதிர்ப்பு முதலான பல இயற்க்கை அழிப்பிற்கு எதிரான கருத்துகளில் உடன்பட்டு நிற்பவர்களே. இருப்பினும், இன்று அவர்கள் எதிர் வினை ஆற்றும் போதோ, விமர்சனம் செய்யும்போதோ ஏதோ இயற்க்கைக்கு எதிரிகள் போல் பேசுவதை கண்டு வியப்பு தான் வருகிறது.

சரி விமர்சனம் தான் என்றாலும் ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம் / பகடி என்ற கேள்வி தான் அடுத்ததாக வைக்கப்படுகிறது. இயற்கை மருத்துவம் என்ற சொல்லாடல் கடந்த சில வருடங்களாகவே பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டும் மக்களிடம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டும் வந்திருக்கிறது. கருத்துருவாக்கத்தினூடே நவீன மருத்துவத்தின் மீது பன்னாட்டு சதி, பக்க விளைவு, பணம் வசூலிக்கும் மருத்துவர்கள் என பல நிலைகளில் காழ்ப்புணர்ச்சி விதைக்கப்பட்டும் வந்திருக்கிறது.

அப்பொழுது திறந்த பார்வையுடனான விவாதங்களாகவே எதிர்வினை பெரும்பாலும் ஆற்றப்பட்ட்டது என்பதையும் நவீன மருத்துவத்தின் மீதான குற்றச்சாட்டுகள் சுத்தமாக நிராகரிக்கப்பட்டதுமில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதே போல், மரபு வழி மருத்துவத்தை ஏன் பின்பற்றக் கூடாது ஏன் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வியை ஆரோக்கியமான விவாதமாகவே எதிர்கொள்ளப்பட்டது. அப்படி இருக்கையில் இன்று என்ன சிக்கல்? ஏன் இந்த கடுமையான விமர்சனம்?

விவாதங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஆய்வுகள் / தரவுகள் கொண்டு நிரூபிக்கப்படவேண்டியதும் அவசியம். அப்படியான நிரூபிக்கப்பட்ட தரவுகளை கோரும்போது ஏதோ ஒரு anonymous இணையதள முகவரியை தரவாக தருவது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பது நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

அதே போல், இயற்கை மருத்துவம் என்ற பெயரில், குறைந்தபட்ச ஆதாரமின்றி கான்செர் / எய்ட்ஸ் என பல உயிர்கொல்லி நோய்கள் தொடங்கி மக்கள் இன்று பரவலாக பாதிக்கப்பட்டிருக்கும் டெங்கு வரை பலவாறான வழிமுறைகள் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டே இருக்கிறது. இவற்றில் உடல் தன்னை தானே எந்த நோயிலிருந்தும் சரி செய்து கொள்ளும் போன்ற வாதங்கள் இன்னும் உச்சம்.. இது போன்ற செய்திகள் பரப்புரைகள் அதிகமான சூழலில், எல்லோருமே அந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கேள்வி கேட்டிருக்க வேண்டும் மாறாக மரபு வழி சரியாகத் தான் இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புவது அபத்தம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

இங்கே விமர்சனம் நவீன vs இயற்கை என்ற அளவில் பார்க்கப்படுவதே தவறானது. நிருபிக்கப்பட்ட vs நிரூபிக்கப்படாத என்பதே சரி. அப்படி நிரூபிக்கப்படாத மருத்துவ முறையெனில் அவற்றை நம் சுய விருப்பு / வெறுப்பு / கருத்தியல் கடந்து விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உட்படுத்துவதுமே சராசரி பகுத்தறிவாக இருக்க முடியும். இப்படி பரப்பப்பட்ட பல செய்திகளின் உண்மைத்தன்மையைக் கேள்வியும் / மறுப்பும் / விமர்சனமும் அல்லது குறைந்தபட்சம் சீரமைப்பாவது மரபு வழி மருத்துவத்தை ஆதரிப்போரே செய்திருந்தால் இன்று இந்த கடுமையான விமர்சனமே கிடையாது. மரபு மருத்துவம் என்ற போர்வையில் தோன்றியவையெல்லாம் பரப்பப்பட்டபோது அமைதி காத்துவிட்டு, இன்று அதை எவரேனும் கேள்வி கேட்டால் அவர்கள் இயற்கையின், மரபின் எதிரிகளெனக் கொள்வோம் என்பது எவ்வளவு பெரிய முரண்?

தரவுகள் இருப்பினும் அவை பன்னாட்டு சூழ்ச்சியாக இருக்குமோ என்ற ஐயத்தால் நவீன மருத்துவத்தை விமர்சிக்கும் நம்மால் தரவுகள் அற்று யாரோ ஒருவர் தனிமனிதனாகக் கூறுவதை கேள்வியே இல்லாமல் பின்பற்ற முடியும் அல்லது காணாது இருக்க முடியும் என்ற மனநிலையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதே போல் கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் சரியான பதிலளிக்காமல் மீண்டும் மீண்டும் நவீன மருத்துவம் தவறு என்றும் மரபு மருத்துவம் தவறில்லை என்றும் பொதுவான வாதம் மட்டும் வைப்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

கடைசியாக, எந்தக் கருத்தியலும் காலத்திற்கு ஏற்ப விவேகம் கொள்ளல் வேண்டும். வீட்டு மருத்துவம் மட்டுமே போதும் மருத்துவமனை தேவை இல்லை என்று இன்றைய டெங்கு விற்கு ஒருவர் கூறுவாரேயானால், அதை குறைந்தபட்சம் மறுதலித்தாவது பேசாமல் அப்படியே ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியானதாகத் தோன்றவில்லை. மருத்துவ நெறி (ethics) என்று ஒன்று இருப்பின், அதன்படி மரபு, இயற்கை, சித்த, என பல்வேறு பேரில் உலவும் கருத்துகளை முறைகளை அந்த அந்த துறையை சார்ந்தவர்களே கேள்வி கேட்டோ மறுத்தோ தன்னிச்சையாக பேசியிருக்க வேண்டும் இந்நேரம். அப்படி பேசாமல் மௌனம் சாதித்தால் கண்டிப்பாக மற்றவர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிக்கத்தான் செய்வார்கள், பகடி செய்யத்தான் செய்வார்கள்.

Advertisements
Posted in #SriScribbles, Politics, Society

தற்கொலையும் ஆற்றாமையும்..

 

 

இன்று மதியம் வந்த செய்தியிலிருந்து ஆற்றாமை, கோபம், துயரம் என அனைத்தும் கலந்து தொண்டையை அடைக்கிறது., ஒவ்வொரு முறை அனிதா இதற்கு முன் பேசிய பதிவை இப்பொழுது பார்க்கும்போது இதயம் கனப்பதையும், கைகள் நடுங்குவதையும், கண்கள் ஈரமாவதையும் ஏனோ தடுக்க முடியவில்லை. தற்கொலை என்பதின் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பும் விமர்சனமும் இருப்பினும் தற்கொலை எனும் சிந்தனைக்கு ஒருவர் அறிந்தே தள்ளப்படுவதும், அதையே ஏளனம், அதற்கே அறிவுரை கூறுவதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

 

ஒவ்வொரு முறை அந்த காணொளியைப் பார்க்கும்பொழுதும், கடந்த மூன்று நான்கு வருடங்களில் அனந்தபுரத்தில் நான் பேசிப் பழகிய ஒவ்வொரு குழந்தையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறாள் அனிதா. அந்த நினைவு இந்த துயரத்தின் தாக்கத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆற்றாமையும், கோவமும், துயரமும் ஒரு சேர அறைவது போன்ற ஒரு உணர்வு. உள்ளுணர்வின் வெளிப்பாடாக, கள்ளம்கபடம் அற்ற ஒரு உண்மையான மனதையும் மகளையும் துச்சமாக்கியிருக்கிறது இன்றைய அரசுகளும் நாமும்.

 

இந்த மரணத்தில், தற்கொலை தவறு அதிலிருந்து அவளை அவள் பெற்றோரும் ஆசிரியரும் மீட்டிருக்க வேண்டும், மருத்துவம் இல்லையென்றால் வாழ்கையில்லையா வேறு படிப்பு இல்லையா, NEET தான் மருத்துவ நுழைவு என்று மத்திய அரசு சொல்லிய பிறகு அதற்கான பயிற்சியை அவள் எடுக்காதது யார் தவறு என்று கேட்போரை கண்டு வரும் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை. பள்ளி நேரத்தை முடித்து மற்ற வேளையில் தாய்/ தந்தையுடன் செங்கல் சூலையிலோ, பாறை உடைப்பதிலோ , தினக் கூலியிலோ உதவியாக நேரத்தை செலவிட்டு, மீதமுள்ள நேரத்தை பயன்படுத்தி 70 வருடமாக தமிழக அரசியல் வளர்த்த பாடத் திட்டத்தையும், அரசையும், தன் உழைப்பையும் மட்டுமே நம்பி போராடி தேர்வில் எல்லா வசதி வாய்புகள் கொண்ட சூழலில் வளர்ந்தவர்களால் கூட எட்ட முடியாத மதிப்பெண்ணை எட்டிய மாணவியை இது போன்ற  கேள்விகள் கேக்க உண்மையில் நாக்கு குறைந்தபட்சம் கூசியிருக்க வேண்டும்.

 

இத்தனை இன்னல்களையும் கடந்து கடினமாக உழைத்து  படித்து வெற்றி பெற்ற மாணவியை, வருட கணக்காக பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று, வீட்டில் வசதி வாய்ப்புடன் பயிற்சி பெற்ற ஒருவருடன் போட்டித் தேர்வில் ஓட சொல்வது அநீதியன்றி வேறென்ன? அவளை தகுதியற்றவள் என்று சொல்வது அயோக்கியத்தனமன்றி வேறென்ன? இதில் அவளுக்கு ஏன் அரசுப் பள்ளிகள் பயிற்சி அளிக்கவில்லை, syllabus சரி இல்லை, இன்னும் ரெண்டு வாய்ப்பு இருக்கிறதே என்ற மேலடக்கு கேள்விகள் வேற. பயிற்சி மையங்களுக்கான செலவு, அதை பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உங்களுக்கு வேண்டுமானால் ‘just like that’ போன்ற விஷயமாக இருக்கலாம். அவை பற்றி அறிந்து கொள்ள முடியாத சமூக பொருளாதார சூழலில் உள்ள மாணவர்கள் பெருநகரம் என்று சொல்லக் கூடிய சென்னையிலும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலுமே இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பும், தலைமுறைகளின் கனவின் பதிலுமே பொது தேர்வு அடிப்படியிலான கல்லூரி மாணவர் சேர்க்கை. இன்று அதை தரமற்றது என்று நிறுவ நினைப்பதும், அதை பயின்று தேரியவர்களை தகுதியற்றவர் என்று நினைப்பதும் உங்கள் மனதுகளில் படிந்து இருக்கும் நான் மேலானவன் என்ற ஆதிக்க மனோபாவமே அன்றி வேறில்லை.

 

psychology counseling என்று ஒன்று இருப்பதன் வாய்ப்பைக் கூட அறிந்திராத ஒரு மிக சாதாரண தளங்களில் இருந்து உழைத்து வந்த மாணவியை, அதை பெற்றுக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொண்டால் என்று சொல்பவரையும், அது தான் இரண்டு வருடம் இன்னமும்  இருக்கிறதே என்று கூறுவோரையும் படித்த அறிவிலிகள் என்று தான் கூற வேண்டியிருக்கிறது. இரண்டு வருடம் போட்டித் தேர்விற்கான பயிற்சிக்கு என நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நிலையில் இருக்கும் உங்களுக்கு சமூக பொருளாதார படிநிலைகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் துயரங்களும் அந்த தடைகளை கடந்திட இடும் எதிர் நீச்சல்களும் உங்களுக்குப் புரியப்போவதில்லை. புரிந்தாலும் உணரப்போவதில்லை.

 

 

அனிதாவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் கடந்த சில வருடங்களில் பார்த்து வந்த பல அனிதாகளின் சூழலையும் கனவுகளையும் அறிந்த ஒருவனாய் இந்த இழப்பை என்னால் இன்னமும் சாதரணாமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தரம் தகுதி என்ற தரவற்ற வீண் வெங்காய கருத்துகளை பார்த்து அந்த துயரமும், கோபமும், ஆற்றாமையும்  இரட்டிப்பாக மனது முழுவதும் நிலைகொள்கிறது. அதுவே, மனதில் இருப்பவை முழுவதையும்  இப்பொழுதும் எழுத விடாமல் கைகளையும், பேச விடாமல் தொண்டையையும் அடைக்கிறது.

 

பல சூழல்கள், பல அனிதாகள் வாழும் ஊரில், இனியொரு இன்றைய நிலை இல்லாமலிருக்க காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என கட்சி வேறுபாடுகளைக் கடந்து வளர்த்த கல்வியில் சமூக நீதியையும், மாநில சுயாட்சியையும் மீட்டு எடுப்பதையும் மத்திய ஒற்றைக் கொள்கையை விரட்டி அடிப்பதையும் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை.

 

Posted in #SriScribbles, Politics, Society

சமூக நெறியும் NEETஉம்..

NEET – தகுதி தேர்வு பற்றிய பலவாறான கருத்துகள் பரவி வரும் நிலையில், ஒரு சராசரி மாணவனாகவும் கடந்த சில வருட அனுபவங்களாலும்  ஏற்பட்ட சுய புரிதல் மற்றும் படிப்பினையிலிருந்து கல்வி, நுழைவு தேர்வு, அரசியலமைப்பு, மருத்துவக் கட்டமைப்பு போன்றவற்றின் மீதான பார்வையின் ஒரு பகுதியே இப்பதிவு.

 

இன்று NEET கட்டாயம் என்று மத்திய அரசால், திணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கும் சமூக நீதியிற்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். முதலாவதாக கூட்டாட்சி (federal) அமைப்பிற்கு புறம்பாகவும், இரண்டாவதாக சமூக மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு  எதிர்மறையாகவும்.

 

வெவ்வேறு மொழி, வாழ்வியல் முறை கொண்ட நாடு இந்தியா என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டிய புது செய்தியல்ல. இவ்வாறு பன்மை கொண்ட நாட்டின் அந்த பன்மையை பேணுவதற்காகவே, மாநிலங்களிற்கு என்று சுயாட்சி மற்றும் சுயமாக திட்டங்கள் அமல்படுத்தும் உரிமை  வழங்க பட வேண்டியிருக்கிறது, இதுவரையிலான பாராளுமன்ற அரசியல் ஓரளவேனும் வழங்கியும் வந்திருக்கிறது. குறிப்பாக மொழி, வாழ்வியல்  போன்றவை வெவ்வேறு மாநில மக்களிற்கும் மாறுபடும் சூழலில்., கல்வி, பொது சுகாதாரம் போன்றவையை தீர்மானிப்பது அந்த அந்த மாநிலங்களின் அதிகாரமாக இருப்பதே கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தும். இந்நிலையில், எழுபது வருட சுயாட்சியில், எல்லா மாநிலங்களும் ஒரே சமமான காலகட்டத்திற்கு  மத்திய அரசில் அங்க வகித்தும், மாநில சுயாட்சி செய்தும் வந்த நிலையில், பொது சுகாதாரம், கல்வி போன்றவையில் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்கள் மக்களுக்காக தொடர்ச்சியாக போதுமான வளர்ச்சி பெற்றுள்ளன. உதாரணத்திற்கு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கைப்படி வரிசைபடுத்துவோமேயானால் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகியவையே முதல் சில இடங்களில்  இருக்கின்றன. இத்தனை வருட வளர்ச்சியை ஒரே நாளில், ஒரே நாடு என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு என்ற முறையில் எழுபது ஆண்டுகள் எந்த வித மக்கள் அக்கறையும் கொள்ளாத பிற மாநில அரசின் குறைகளை நிரப்ப, தன் மக்களின் நலனை விட்டுக்கொடுக்க சொல்வது சுரண்டலன்றி வேறென்ன என்று கூறுவது. ஜனநாயக அரசியல்ப்படி எல்லா மாநிலங்களிலும் கல்வி பொது சுகாதார வளர்ச்சியை முன்னெடுக்காமல் இது போன்ற நகர்வுகள் வேதனையான அதிகார சுரண்டலாகவே தெரிகின்றன. (கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற  மாநிலங்கள் neet ஐ எதிர்காததிர்கான காரணத்தை தனி பதிவாகவே எழுதலாம்)

 

அடுத்ததாக, சமூக மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காண இடையூறாக  தகுதி தேர்வு விளங்குகிறது என்றே சொல்லலாம். கடினமான பாடத்திட்டம், கடினமான தேர்வு முறைகள் தான் தரமான பட்டதாரிகளை உருவாக்கும் என்பது மிக பெரிய மாயை. CBSE, Matric, சமச்சீர் / ஸ்டேட் போர்டு என எந்த பாடத்திட்டங்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் அடிப்படை ஒன்றாகவே இருக்கும் (மூன்றிலும் படித்த அனுபவம் உள்ள மாணவன் என்ற முறையில் என் அனுபவம் இது). பின்னர் ஏன் போட்டி தேர்வுகளில் CBSE மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதே பெரிய கேள்வி. போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள்., பல வருட கேள்வித்தாள்களையும், அதில் கேட்கப்படும் கேள்விகளையும் மாதிரியாகக் கொண்டு மாத / வருட கணக்காக வீட்டிலோ அல்லது பயிற்சி மையங்கள் மூலமாகவோ பயிற்சி பெறுபவர்களே. சரி, இது போன்று ஒரு வருடத்தை வீட்டிலே பயிற்சிக்காக கழிக்கவோ அல்லது ஒரு வருடம் பயிற்சி மையங்களில் சேரவோ முடிந்தவர்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களால் மட்டுமே ஒரு வருட காலத்தையோ ஒரு வருட பயிற்சி மையத்திற்கான செலவையோ ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பது தான் உண்மை. இந்த சமூக பொருளாதார பின்புலம் கொண்டவர்களே பெரும்பாலும் தங்கள் வீட்டுப்பிள்ளைகள் மற்றவரை விட தரமான பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்ற ஆதிக்க மனநிலையில் CBSE போன்ற பாடத்திட்டங்களில் குழந்தைகளை சேர்கிறார்கள் (பாடத்திட்டங்களுக்கு இடையேயான தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அறியாமல்). இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களை பார்த்து, சமூக பொருளாதார படிநிலை அடுத்திருப்பவரும் ஒரு கௌரவமாக கருதி CBSE ICSE ஆகியவற்றை நாடி செல்வதே. இந்த நிலையில் தான் CBSE மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்ற வாதம். உண்மையில், பெரும்பாலும் போட்டித் தேர்வு வெற்றிகள் பயிற்சியை பொருத்தது மட்டுமே (கல்லூரி நுழைவுத்தேர்வு முதல் சிவில் சர்வீஸ் தேர்வுகள் வரை). இதில் ஒரு பாடத்திட்டம் பெரிது மற்றொண்டு சிறிது என்பதும் இவையே போட்டித் தேர்வு முடிவுகளை முடிவு செய்கின்றன என்பதும் மாயையான வாதங்களே.

 

போட்டித் தேர்விற்கான பயிற்சியில் முழு மூச்சில் யாரால், எந்த வாழ்வியல் சூழலில் உள்ளோரால் முடியும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. பள்ளி முடித்து மற்ற நேரங்களில் தந்தை தாயுடன் வயலிலோ, குறுதொழிழிலோ பங்கு கொள்ளும் மாணவரையும், பள்ளிப்பாடம் மற்றும் தன் சுயதேவைகள் தவிர வேறு எந்த சிந்தனையும் கொள்ளத்தேவையில்லாத மாணவரையும் ஒரே தராசில் வைத்து பள்ளித்தேர்வுகளுக்கு மேல் போட்டித் தேர்வுகள் நடத்துவது எந்த  விதத்தில் நீதி என்று தெரியவில்லை.

 

நூற்றியிருபதிற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் பலராலும் கல்லூரிப்படிப்பை எட்டுவது கூட இன்றும் கனவாக இருப்பதற்கான காரணம் , மத்திய அரசால் நடத்தப்படும் பொறியியல் மருத்துவ, கல்லூரிகளின் சேர்க்கை முறையான இம்மாதிரி போட்டி தேர்வுகளினாலும், கல்லூரிகளின் குறைந்த எண்ணிக்கையினாலும் தான். இந்நிலையில், எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் இளங்கலை கல்வியை பெரும்பாலான எல்லாத்தர மக்களுக்கும் கொண்டு சேர்த்திருப்பது தமிழக கல்வி மற்றும் தேர்ச்சி முறையாலே.

 

நாட்டிலே அதிகபடியான அரசு நிர்வகிக்கும் மருத்துவக்கல்லூரிகள் கொண்ட மாநிலம், பரவலான இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிகள், நாட்டிலே சிறந்த பொது சுகாதார அமைப்பு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகள் வரை சிகிச்சை, நாட்டின் சராசரியை விட குறைவான பிரசவ இறப்பு விகிதம் என கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற பலவற்றிலும் தமிழகம் (தலைநகரம் மட்டும் அல்லாமல் மாநிலம் முழுவதுமான வளர்ச்சி) மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறி இருப்பதை ஐந்து நிமிட கூகிள் தேடல் கூட சொல்லி விடும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற மாநிலங்களை விட ஒட்டுமொத்த வளர்ச்சியில் மேம்பட்ட மாநிலமாக இருந்தும் இத்தனை குறை, கேள்வி கேட்கும் விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதே  தமிழகத்தின் கல்வி மற்றும் தேர்ச்சி முறைகளின் தரத்தின் அளவீடு, NEET அல்ல. இவையனைத்தையும் அடைய ஏற்பட்ட எழுபது ஆண்டு பயணத்தை ஒரே அடியாக பிடுங்கி எரிவதே NEETஇன் முடிவுகள்.

Posted in #SriScribbles, Society

சுயாட்சி எனும் தொடக்கம்.

இன்றும் நினைவு இருக்கிறது, முதல் நாள் இரவே வெள்ளை கேன்வாஸ் ஷூவிற்கு போலிஷ் போட்டு, அடுத்த நாள் வேக வேகமாய் மிதிவண்டியில் பள்ளிக்கூடம் சென்று ட்ரில், மார்ச் பாஸ்ட் என கலந்து கொண்டு, காந்தி, பகத் சிங்க், காமராஜர், சுபாஷ் சந்திரா போஸ், நேரு என சொல்லி வைத்தார் போல் ஆண்டு தோறும் ஒரே பெயர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட தலைவர்கள் பற்றிய பேச்சுகளை கேட்டும் பேசியும் கடந்த பள்ளிக்கால சுதந்திர தின விழாக்களை..

 

அதே தலைவர்களே பெரும்பாலும் பள்ளிக்கால வரலாற்று புத்தகங்களிலும் நிறைந்து இருந்தனர்.அவர்கள் சார்ந்த தேசிய சிந்தனைகள் (தணிக்கை செய்யப்பட்ட) மட்டுமே வரலாற்று பாடங்கள் மூலமாக ஒரு சராசரி மாணவன் /மாணவியின் மனதில் தேசப்பற்று என்பதின் முதல் பிம்பமாக விதைக்கப்பட்டுமிருக்கிறது, விதைக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. ஆங்கிலேய எதிர்ப்பும் அதன் வழியே பெற்ற சுய அரசாட்சியுமே இன்றளவும் பள்ளிகளில், வீடுகளில் கற்றுத்தரும் தேசப்பற்றாக இருக்கிறது. இதில் சுய அரசாட்சி என்பது என்ன என்பதே ஒரு பெரிய கேள்வி, தொடர்ந்து கேட்கப்பட வேண்டிய கேள்வி,

 

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் இருந்த மன்னராட்சியை மண்ணின் மக்களின் வரலாற்று பெருமை என்று கூறுவது, மன்னராட்சியில் சமூக அங்கீகாரம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள்.மக்களாட்சி அமைத்து இத்தனை வருடங்களாகி, இன்றளவும் சமுதாய, பொருளாதார படிநிலைகளில் ஒரு படிக்கட்டில் இருப்பவர் தனக்கு அடுத்த அடுத்த படிக்கட்டில் இருப்பவர் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மன்னராட்சிக்காலத்தில் அதே ஆதிக்கத்தின் வீரியம் என்னவாக இருந்திருக்க முடியும் என்று புரிந்து கொள்வது கடினமானதில்லை. பெரும்பாலான அரசர்கள் பற்றிய கதைகள் அரசர்கள், படையெடுப்பு, தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது போன்ற ஒரு சில காரணிகளை சுற்றியே வளம் வருபவை. இந்த கதைகளில் எவற்றிலும் பெரும்பாலும் சாதாரண மக்களின் மன ஓட்டங்கள், பார்வைகள் பதிவிட பட்டதே இல்லை.. பொற்கால ஆட்சி என்று இன்றும் கருதப்படும் மன்னர்களின் ஆட்சிக்காலங்கள் மன்னரை புகழ்ந்து பாடிய அரசவைக் கோப்புகள், எஞ்சிய தொல்லியல் மிச்சங்கள் மற்றும் பிற்கால புனைவு கதைகளுமே தான். அரசர்கள் மாறினர், அவற்றுடன் அரசாட்சி முறைகளும்.சேரர்கள், பாண்டியர்கள் , சோழர்கள் , பல்லவர்கள் , நாயக்கர்கள், மராத்தியர்கள், சுல்தான்கள் என ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு மன்னர்கள். ஆனால் இவர்கள் அனைவரின் ஆட்சியின் கீழும் வாழ்ந்தது தேய்ந்தது எல்லாமே ஆண்டாண்டு காலமாக அதே நிலப்பரப்பில் வாழ்ந்த சாமானிய மனிதன். இந்த எல்லா ஆட்சியின் கீழும் ஏதோ ஒரு வகையில் அந்த சாமானிய மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.

 

இதே வரிசையில் தான் ஆங்கிலேயர்களின் ஆட்சியும். மக்கள் மீது அதிகாரம் செலுத்தி கட்டுக்குள் வைத்தல் எனும் ஆட்சி முறையும். எல்லா மன்னர்களும் ஏற்படுத்திய மொழி, கலாச்சார, வாழ்வியல் மாற்றங்களும் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் தொடர்ந்ததே தவிர அது முற்றிலும் புதிய அடக்குமுறையல்ல . இவை அனைத்திலும் அரசர்களின் சிந்தனைக்கு ஏற்ப பலவிதமான மாறுதல்களுக்கு உள்ளானதே இன்று நாம் ஒரு சமூகமாக வழங்கி வரும் பல பழக்க வழக்கங்கள். இந்த பழக்க வழக்கங்களில் எது சாமானிய மக்களின் பாரம்பரிய வாழ்வியல், எது கடந்து சென்ற மன்னர்களால் திணிக்கப்பட்டவை என்பது மிக பெரிய சிலந்தி வலை. இன்று சோழர் பாண்டியர், பல்லவர் என எந்த ஆட்சிப் பெருமையையும் தமிழர் பெருமையாய் பேசுவது, அதன் வாயிலாய் கலாச்சாரம் போதிப்பது, வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகளை கேள்விகளின்றி தூக்கிப் பிடிப்பது எந்த வகையிலும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முழுமையாக உதவாது. அதே போல், இந்த மொத்த காலவரிசையில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் ஒன்றை முற்றிலும் புனிதமாக்குவதும் மற்றொன்றண்டை முற்றிலும் இகழ்வதும் ஒருதலைபட்சமானதாகவே இருக்கும்.

 

இப்படி நம்மூர்காரன், பக்கத்தூர்காரன் பக்கத்து நாட்டுக்காரன் அயல்நாட்டுக்காரன் என பல வகையில் அதிகாரத்தால் ஆளப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையை வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமே தந்து விடாது. உண்மையான விடுதலை என்பது வரலாற்றின் எந்த காலப்புள்ளியில் ஏற்பட்ட எந்த வாழ்வியல் மாறுதல்கலையும் தன் வாழ்வியல் முறையாக ஏற்று கொண்டிருக்கும் மக்களையும் சமமாக கருதி அவர்களின் தேவைகளையும் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதே அன்றி வேறில்லை. இப்படியான மக்கள் விடுதலையின் ஆரம்ப புள்ளி மட்டுமே ஆட்சி மாற்றமும், மக்களாட்சி ஏற்பும்.

 

இந்த ஆராம்ப புள்ளி மட்டுமே தேசப்பற்று என்றும், ஒரு சார்பான பழம்பெருமை மட்டுமே தேசப்பற்று என்றும் இன்றுவரை எண்ணுவதின் விளைவே இன்று நடந்தேறும் கலாச்சார, மொழி, மத, ஜாதிய அடிப்படையிலான அடிப்படைவாத வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் திணிப்புகள். மக்களின் சுயாட்சி என்பது வெவ்வேறு சூழல்களால், வெவ்வேறு படிப்பினைகளால் பலவிதமான வாழ்க்கை முறை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையும் அரவணைத்து சமூக சமன்பாடு ஏற்படுத்துதலாகவே இருக்க முடியும்.இவ்வாறான மக்கள் பற்றை விடுத்து, வேற்றுமைகளின் வண்ணங்களை மறந்து, கண்மறைவாய் பதியப்பட்ட ஏதோ ஒரு கோட்பாடுகளையும் , எல்லைகளையும் தேசபற்றிற்கான அடையாளங்களாய் தொடர்வது என்பது நம்மை நாமே சமூகமாக வாழும் மிருகங்களின் தன்மையான territorial marking கு பின்னிழுத்துச் செல்வது தவிர்த்து வேறில்லை.

 

சுதந்திர தினக் கொண்டாட்ட்டங்கள் என்ற நிலையில், மக்கள் மற்றும் சமூக சமநிலையையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் வளர்க்கும் நாள் வரும்வரை விடுதலை என்பது ஒரு நாள் ட்ரில் ஆகவும் பழம்பெருமை பேசும் march past ஆகவுமே கடக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

Posted in #SriScribbles, Politics, Society

இலவசம்

 

இலவசம் தான் நாட்டை கெடுக்கிறது, மக்களை சோம்பேறிகளாக்குகிறது என்ற எண்ணம் சில வருடங்களுக்கு முன் என்னுள் இருந்திருக்கிறது. ஆனால் கருத்துகளையும் நம்பிக்கையையும் சவால் விடும் படிப்பினைகளும் அனுபவங்களும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படியான முரண்பட்ட கேள்விகளுக்கும் பதிலுக்குமான போட்டிப் பதிவே இது..

 

இன்றைய சூழலில் இலவசத்தோடு மானியத்தையும் ஒதுக்கீடுகளையும் கூட கேலியாக இழிவாக சித்தரிக்கும் பல பதிவுகளை பார்க்க முடிகிறது.

 

இவை மூன்றையும் சரியீடு என்ற வார்த்தை கொண்டு ஒருமைப்படுத்தலாம் என்றே தோன்றுகிறது. இவை மூன்றிற்கும் அவற்றின் பயன்பாட்டிற்கும் வேறுபாடுகள் இருப்பினும், சமன்படுத்துதல் என்ற புள்ளியில் மூன்றும் இணைகின்றன.வாக்கு அரசியல் மற்றும் அரசியல் நிர்வாக முறைகேடுகளை புறம்தள்ளி இந்த சரியீடுகளை பார்ப்பது மிகவும் அவசியமாகிறது. வாக்கு அரசியல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் மீதான கோவங்களையும், சமூக பொருளாதார படிநிலைகள் ஊட்டி வளர்த்த வெறுப்புகளையும் வன்மங்களையும் முதலீடாக கொண்டு கட்டமைக்கப்படும் கருத்தியல்கள் விளைவாகவே இந்த சரியீடுகளிற்கு எதிரான கேலி இழிவு பதிவுகளை பார்க்க முடிகிறது..

 

இன்று சமையல் எரிவாயு மானியம் படிப்பபடியாக ரத்து , பொது விநியோக முறை எனப்படும் ரேஷன் நிறுத்தம் போன்ற செய்திகள் உண்மை என்று ஒரு தரப்பும், இல்லை இவை ஊடகங்களின் பொய் பிரச்சாரம் என்று ஒரு தரப்பும் கருத்து மோதல்களில் ஏற்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு – ரேஷன் நிறுத்தம் போன்ற தலைப்பு பேச்சளவில் இன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதே ஒரு எச்சரிக்கையாக தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

சரியீடுகள், சலுகைகள் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது..அரசு அளிக்கும் இலவசம் ,மானியம் , ஒதுக்கீடு ஆகியவை சமூக சமன்பாட்டிற்கும், பொது மக்களின் பயனுக்குமாக இருப்பின் அவை சலுகைகள் அல்ல, மாறாக அவையே ஒரு அரசு சாமான்ய மக்களுக்காக செயல்படுவதற்கான குறியீடுகள். கல்வி , மருத்துவம், வாழ்விடம், உணவு, போக்குவரத்து ஆகியவையே இன்றளவும் மக்களுக்கான அடிப்படை தேவைகள். இந்த அடிப்படை தேவைகளை நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் அளிப்பதே ஒரு மக்கள் அரசின் முதல் கடமையாக இருக்க முடியும் ; இருக்க வேண்டும்.

 

தலைமுறை தலைமுறையாக சமூக பொருளியல் காரணங்களால் கல்வி கற்கும் வாய்ப்பு அமையப்பெறாத சமூகத்தை சார்ந்த மக்களுக்கு, குறைந்தபட்ச கல்வியும் பிரதிநிதித்துவமும்  கொடுக்க வேண்டும் எனும் நிலையிலே ஒதுக்கீடுகள் இன்றளவும் தேவைப்படுகிறது. இவை சமூக சமன்பாட்டிற்கான முன்னெடுப்புகள். இப்படியான ஒதுக்கீடுகள் மூலமாக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று சொல்லுவோருக்கு, எந்தவித பாகுபாடும் இன்றி இன்றளவும் அரசுப்பள்ளிகளில்  எல்லோருக்கும் வழங்கும் இலவச கல்வியும், அதை தொடர்ந்து வழங்கப்படும் புத்தகம், உணவு போன்ற திட்டங்களுமே பதில்.,பள்ளி கல்வியை இலவசமாக கொடுத்தபின் எதற்கு ஒதுக்கீடுகள் என்ற கேள்வி வைக்கப்படுமானால்., தலைமுறை தலைமுறையாக தன் குடும்பத்திற்கான தினசரி வாழ்வியலுக்காக மட்டுமே  போராடும் மக்களிற்கு பிரதிநிதித்துவமும்,  உயர்கல்வி மற்றும் வாய்ப்புகள் பற்றிய புரிதல்களும், உளவியல் ஊக்கமும் ஒரே ஒரு  மாணவன் / மாணவி கல்வி பெற்றால் வந்து விடும் என்பது மொத்த இரவிற்கும் ஒரேயொரு மின்மினி பூச்சி போதும் போன்ற வாதமன்றி வேறில்லை.. ஆனால் இன்று அதே அரசு வழங்கும்  இலவச கல்வியும் பிரதிநிதித்துவமும் பெற்றுக்கொள்வோர் தன்னை தானே குற்றவாளி போல் எண்ண வைக்கும் பதிவுகளும் விவாதங்களும்  ஏதோ ஒரு வகையில் ஆதிக்க மனோபாவமே. அதிலும் அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியதாக உலாவும், “You prefer  your  reserved, we prefer your deserved” போன்ற வாசகங்களை கண்டு சிரிப்பதா வருத்தப்படுவதா தெரியவில்லை. மைக்ரோசாப்ட் , கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில்  எந்த மாதிரியான கல்லூரிகளில் இருந்து மாணவர்களை எடுக்கிறார்கள் என்பதையும், அந்த மாதிரி கல்லூரிகளுக்கு செல்ல தேவையான ( குறைந்தபட்சம்  கோச்சிங் கிளாஸ்ஸஸ் ) பொருளாதாரமும் , சமூக பின்புலமும் யாருக்கு இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதையும் கடந்து இந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் பலரும்  வெளி நாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு பெரும் அளவிற்கு சமூக பொருளாதார பலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

 

தலைமுறை தலைமுறையாக சொந்தமாக வீடு, நிலம் என்று வாழ எந்த வித கட்டுப்பாடுமின்றி வளர்ந்த ஒருவருக்கும்  அவை மறுக்கப்பட்டு அவற்றை பேணுவதற்கு போராடும் ஒருவருக்கும்  இடையில் ஒப்பீடு என்பது தற்போதைய பொருளியல் மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது. மறுக்கப்பட்ட பின்புலத்திலிருந்து வந்த ஒருவர் கல்வியில் தோல்வியடைந்தால் அவரைத்  தாங்கிப் பிடிக்க, மாற்று வாய்ப்புகள் கொடுக்க அவர் குடும்பமும் சமூகமும் இல்லாத நிலையில், தோல்வியடைந்தாலும் தாங்கிப் பிடிக்க தேவையான  குடும்பமற்றும் சமூக பின்புலம் கொண்ட ஒருவர் அவற்றை விமர்சிப்பது ஆதிக்க மனநிலையன்றி வேறென்னவாக இருக்க முடியும்.. இதில் மிகப் பெரும் நகைச்சுவையே, அதே ஒதுக்கீடும், இலவச கல்வியும் பெற்று சமூக பொருளியல் படிநிலைகளில் முன் வந்தவர்களே அதே படியில் ஏறும்  இன்னொருவரை  இகழ்வதும் கேலி செய்வதும் தான்..

 

இதே நிலையில் தான் மருத்துவம், வாழ்விடம், உணவு போன்ற காரணிகளில் மானியம் இலவசம் என சமூக பொருளியல் அடிப்படையில் அரசால் இன்று வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. மாதம்  தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஓரளவேனும் மருத்துவ செலவுகளை தனிப்பட்ட முறையிலும் நிறுவனங்கள் வாயிலாகவும் பூர்த்தி செய்து கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.  அந்த வாய்ப்பில்லாதர்வர்களுக்கு அரசு அந்த காப்பீட்டை தர வேண்டியது கடமையாகிறது. அதே போல் இதிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம் என பலவும் கட்டணமின்றியும் குறைந்த கட்டணத்தோடும் எல்லோருக்கும் ஆனதாகவே அமைக்கப்பெற்றுள்ளது.

 

தனியார்மயம் அதிகமான இன்றைய  சூழலில், உணவு ்அதை சமைக்க தேவையான எரிபொருள் என எல்லாவற்றிற்கும் தனிப்பட்ட நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கும் நிலையில், அவற்றை சமூகத்தில் இருக்கும் எல்லா படிநிலைகளில் உள்ளோரும் பயன்படுத்துவதற்கு அரசின் சரியீடுகளாக மானியங்கள் தேவைப்படுகின்றன.  மாதம் 20000  30000 ஊதியம் வாங்கி, பல தலைமுறையாக சொந்த வீடு நிலம் கொண்ட ஒருவரையும், அதே ஊதியத்தை குடும்பத்தில் முதலாக அடைந்து சுயமாக வீடு நிலம் இல்லாதவரையும்,  முதல் முதலாய் வங்கி கடன் வழியாக வீடு நிலம் வாங்க எத்தனிப்பவரையும் தற்போதைய ஊதியம் ஒன்று தானே என்று  தராசில் சமம் என்று கொள்வது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது..இந்த மூவகை மக்கள் இடையே தேவைகளும் வாய்ப்புகளும் வேறுபடும் நிலையில், மாதம் வருமானம் அன்றாட செலவினங்களுக்கே தடுமாறும் நிலையில் இருப்போருக்கு வழங்கும் மானியம் , சரியீடுகள் கேலியாய் இழிவாய் சித்தரிக்கப்படுவது மரம் மேல் அமர்ந்து கொண்டு, மரம் ஏற தெரியாமல் கரடியிடம் இருந்த தப்பிக்க ஓடுபவனை கேலி செய்வது போன்ற மனநிலையே. இவை எல்லாவற்றையும் கடந்தும் கூட   பொருளாதார அடிப்படையில் சில வேறுபாடுகள் தவிர்த்து  உணவு,சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு அரசின் நேற்று வரையான மானியம் என்பது எல்லோருக்குமானதாகவே இருந்திருக்கிறது. இன்று மரத்தின் மீது ஏறி விட்டதால் , எல்லோரும் ஏறி விட்டார்கள் என்பது அடிப்படைவாதம் என்பதா இல்லை பரந்த பார்வையின்மை என்பதா., தெரியவில்லை. அப்படி ஏறிவிட்டோம் என்பவர்கள் தாராளமாக மானியங்களை மறுத்துக் கொள்ளலாம் ( அதெப்படி அவருக்கு மட்டும் குறைந்த விலைக்கு எரிவாயு உணவுப் பொருட்கள்? என்ற முதல் ஆளாய் போய் அவற்றைப் பெற்று கொள்வோர் அதை எதிர்பவர்களாகவே தான் இருக்கும் ).

 

இதே நிலையில் தான் வீடு, அடுப்பு இன்னும் பலவற்றை வழங்குவதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது..மாத தவணை முறையில்  வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவோரும், முழுப் பணம் கொடுத்து வாங்குவோரும், வாங்கவே இயலாத நிலையில் உள்ள மக்களும் இருக்கும் சமூகமிது.   அரசியல் ஆதாயத்திற்கு கட்சிகள் இவற்றை வழங்கின என்றே எடுத்துக் கொண்டாலும், அந்த பொருட்களை சுயமாக வாங்க முடியாத சமூக பொருளாதார கட்டமைப்பில் இருக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.  அவ்வாறான  மக்களுக்கு இவையெல்லாம் மக்களுக்கான சமூகம் சார்ந்த திட்டங்கள் தான்.அவர்களை சமநிலைக்கு கொண்டு வரும் திட்டங்கள் தான். இல்லை, இவை அனைத்தும் மக்களை சோம்பேறியாக்கும் திட்டம் என போதனை செய்தால், போதனை  செய்யும் எத்தனை பேர், அதே திட்டத்தின் வாயிலாக கொடுக்கப்பட்ட பொருளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறாமல் இருந்திருப்பார்கள் என்றால் பதில் மிகப்பெரிய வெற்றிடம் தான்.

 

சரி, இப்படியே எல்லா வரிப்பணமும் மானியம் என்றே ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு செலவிடுவது  எப்படி? என்பதே அடுத்த கேள்வி பலருக்கும். முன்னேறிய பட்டியலில் இருந்து கொண்டு தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தும் நாடுகள் பலவும் குறைந்தபட்சம்  கல்வி மருத்துவம் நீர் உணவு   போன்ற அடிப்படை வாழ்வாதாரத்தை சமரசம் செய்து எந்த திட்டத்தையும் அறிவிப்பதில்லை. இந்த நாடுகளில் சமூக பொருளாதார படிநிலைகள் நம் நாடு போன்று அத்தனை சிக்கல்கள் நிறைந்தவையாகவும் இல்லை என்பதே நிதர்சனம். தொழில்நுட்ப வளர்ச்சி சம விகிதத்தில் வளரவும் அனைத்து நிலையில் உள்ள மக்களும் தன்னிறைவு பெறவும் மக்கள் சேவை சார்ந்த விஷயங்களை அரசைத் தவிர்த்து தனியாரால் கண்டிப்பாக செய்ய முடியாது என்பதும் தெள்ளத்தெளிவான உண்மை. மிக முக்கியமாக தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியம் தான், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லாமல் ஆடம்பரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் செய்யப்படுவதால் ஒரு சிலருக்கு மட்டுமே பயன். அரசு பெரும் ஒரு   ரூபாய் வரிப்பணம் கூட தேவைகளின்படி சரியான  விகிதம் பிரித்து பயன்படுத்துதலே ஆரோக்கியமான சமூக முன்னெடுப்பாக இருக்கும்..

 

கடைசியாக இத்தனை வருடம் இந்த திட்டங்கள் இருந்தும் ஏன் இந்த நிலை மாறவில்லை என்ற கேள்வி.,  இதற்கான பதில் இத்திட்டங்களை நிறுத்துவதிலில்லை மாறாக இங்கிருக்கும் அரசியல்  நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வதிலும் , திட்டங்களை ஆக்கப்பூர்வமான வகையில் ஒரு சமூகமாக வளர்ச்சியடையத் தேவையான முன்னெடுப்புகளை எடுத்தலிலும் தான் இருக்கிறது.இவை அனைத்திற்கும் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இருத்தல் மிக அவசியம். சமமான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் ஒரு சார்பு மக்கள் மட்டுமே அதிகாரத்தில் இருந்க்கும் பட்சத்தில், இந்த வேற்றுமைகள் மாறுவது சாத்தியமற்றது, . இல்லை இப்பொழுதும் இந்த திட்டங்களை நிறுத்துவது தான் பதில் என்றால், ஏரியை தரையோடு தரையாய் மாற்றி அதன் மேல் செயற்கை  நீச்சல் குளம் கட்டுவதுபோன்ற வளர்ச்சியே மிச்சம்..  தரையோடு தரையாக மாற்றும் செயல்முறையில் நசுக்கப்படும் உயிரினங்களாக மட்டுமே சாமானிய மக்கள் மிஞ்சுவார்கள்., ஒரு சிலர் மட்டுமே உல்லாச நீச்சல் அடிப்பார்கள்.

Posted in #SriScribbles, Politics, Society

ரசிகனாகிய நான்

சமூகத்தின் பிரதிபலிப்பு கலையா? இல்லை கலைகளின் பிரதிபலிப்பு சமூகமா? என்பது கோழியா முட்டையா போன்ற ஒரு முடிவில்லா கேள்வி. ஒரு புள்ளியில் இந்த கேள்விகள் இணைந்தே தீர்கின்றன அல்லது குறைந்தபட்சம் உரசிக்கொள்கின்றன. நம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும், ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதோ ஒரு வகை கலை உடன் பயணித்துக் கொண்டிருந்திருக்கும். இசை, பாடல், புத்தகம், படம் என.

 

நமக்கு அந்நியமான ஒருவருடன் பேசுவதற்கோ, பழகுவதற்கோ கூட கலைகளும் அதன் மீதான ரசனை மனோபாவமும் பல நேரங்களில் பாலங்களாக அமைவதுண்டு. யாரென்றே தெரியாத இருவரால் கலை , ரசிக மன நிலை இரண்டு கொண்டு மட்டுமே ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எல்லைகள் தாண்டி, நமக்கு சற்றும் தொடர்பில்லா இலக்கியங்களையும் தனதாக்கிக் கொண்டாடும், அதனூடே வேற்றுமைகளைத் தாண்டிய ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் மனம் கலைகளினாலே சாத்தியம். கலைகளுக்கு அடுத்ததாக விளையாட்டும் இந்த வரிசையில் வந்து சேர்கிறது எனினும், கலை ஏற்படுத்தும் இணக்கம் விளையாட்டால் ஏற்படுத்த முடிவதில்லை எல்லைகள் நிறைந்த இவ்வுலகில்.

 

மனித சமூக பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் கட்டமைக்கப்பட்ட பல நூறு வரைமுறைகளும், கருத்தியல் வேற்றுமைகளையும் தாண்டி மக்களை இணைக்கும் சங்கிலியாக கலைக்கூறுகள் இருக்கின்றன என்பது நிதர்சனம். ஆண்டாண்டாக கட்டியமைக்கப்பட்ட வரையறைகளை அறுப்பதும், வேற்றுமைகள் கொண்ட கருத்தியல்களை ஒன்றாய் கோர்ப்பதும் கலை வடிவங்களால் மட்டுமே நடந்திருக்கின்றன. மக்களின் எழுச்சி, ஒன்று கூடல் என வேற்றுமை கடந்த சமூக முன்னெடுப்பின் ஆரம்ப புள்ளியும் கலை வடிவங்களாகவே இருந்திருக்கின்றன.

 

கலை இன்றைய நிலையில் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை கண்டுள்ள வேலையில், மக்களை ஜாதி மத இன வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைக்கும் ஆற்றலுடனே இன்றும் பயணிக்கிறது. பல்வேறு மாறுபட்ட கருத்தியல்கள் கொண்ட மனிதர்களை இணைக்கும் புள்ளியாகவும் கலை இலக்கியங்கள் இன்றும் இருக்கின்றன. ஒற்றை மதம். ஒற்றை மொழி, ஒற்றை இனம் ஒற்றை கருத்தியல் என்று தன்னிலை ஒருமை மட்டுமே பேசும் மக்களையும் ஒரு கணம் வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

 

இந்நிலையில், கலைத்துறையில் இருந்து மக்களரசியல் பேசும், பழகும் ஆளுமைகள் உருவாவது ஆரோக்கியமானதாகவே இருக்க முடியும். கலை என்ற நிலையில் இசை, இலக்கியம், நாடகம் (சின்னத்திரை, வெள்ளித்திரை உட்பட) என்ற எல்லாமும் அடக்கம். அவ்வாறு உருவாகும் ஆளுமைகள் மக்களின் மனம் பேசும், வேற்றுமைகளை இணைக்கும் பாலமாக இருப்பின் அரசியலில் ஈடுபடுவதில் எந்த தவறும் இருக்கப்போவதில்லை. அதே நேரம், மக்கள் மாண்பை புறந்தள்ளி அதிகார, பொருளாதார பயனிற்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொன்றும் யாராயினும் தோற்கடிக்கப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை. எந்த ஆளுமையாக இருப்பினும், சமூக சமன் நிலைக்கும் , மக்கள் வாழ்வியல் அமைதிக்கும் எதிர்வினை ஆற்றும் பொழுது கண்டிக்கப்பட வேண்டியதும், கேள்விக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அவ்வாறான கேள்விகளின்றி “கூத்தாடி அரசாளக்கூடாது” போன்ற விமர்சனங்கள் கொண்டு தான் கேள்விகள் கட்டமைக்கபடும் எனில் பிரச்சனை நம்மிடம் தான் உள்ளது. வேற்றுமைகள் தாண்டி மக்களை இணைக்கும் ஆளுமைகளை எல்லாம் 1௦௦ சதவீதம் அற்ற கருத்தியல், கொள்கை என்று புறக்கணிக்க நினைத்தால், ஜனநாயகம் என்று நாம் கூறும் அரசியலின் அர்த்தமே பொய்த்து விடுகிறது. நடு நிலையும், எல்லா வேறுபட்ட கருத்தியலையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவமும் ஏற்படுத்திக் கொள்பவர்களை எல்லாம், தன் கருத்தியலோடு நூறு சதவிகிதம் ஒன்றுபடவில்லை என்ற காரணத்திற்காக சிறுமைபடுத்துவது பிற்போக்கின்றி வேறில்லை.

 

சமூக சிக்கல்கள் பல பின்னிப்பிணைந்து இருக்கும் சமூகத்தில், முற்போக்கு அரசியல் கூட வாக்கு வங்கி அரசியலுக்காக ஜாதிய சார்புக்கு தெரிந்தோ தெரியாமலோ தள்ளப்படும் நிலையில், பெரும்பாலும் ஜாதிய மத வேறுபாடுகளற்ற ரசிக மனோபாவம் மேலானதாகவே தெரிகிறது.

Posted in #SriScribbles, Society

இந்திய ஜாதிகளும் உலகமயமும்

 

 

கடந்த சனிகிழமை, ஹெல்சிங்கியில் இயங்கி வரும் ஒரு சிறிய வாசகர் வட்டத்திற்கு சென்றிருந்தேன். சென்னையில் கலந்துகொண்ட வாசகர் வட்டங்களுக்கும் இதற்கும் பல வேறுபாடுகள், பல புரிதல்கள். அன்றைய சந்திப்பில் துருக்கி, ரஷ்யா, பின்லாந்த், அமெரிக்கா என வெவ்வேறு நாட்டவர்களுடன் சந்திக்கும், பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பன்மையில் ஒருவனாய் நானும் உரையாடலில் இனைந்து கொண்டேன்.

 

வரலாற்று புனைவு சார்ந்த புத்தகங்கள் பற்றிய உரையாடல் என்று முடிவு செய்திருந்தனர்.. மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்ட உரையாடல் வரலாற்றில் தொடங்கி அரசியல், போர்,  மதம் என பலவாய் விரிந்தது. அந்த ஒற்றை சந்திப்பு, நாம் ஒரு சமூகமாக எந்தளவிற்கு வாசிப்பு பழக்கமற்று இருக்கிறோம் என்பதை தெளிவாய் உரைத்தது என்று தான் சொல்ல வேண்டும்..பல வித தலைப்புகளை பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய அந்த உரையாடலின் ஒரு பகுதியை பற்றிய பதிவே இது.

 

சுய அறிமுகம் முடிந்து, அவரவர் படித்த வரலாற்று புனைவு மற்றும் அதன் தாக்கத்தை பேசிக்கொண்டிருக்க., ஹிந்து மதம், புத்தர் ,இந்தியா பற்றிய தலைப்பிற்கு மாறியது விவாதம். இந்தியா என்ற நிலையில் அனைவரும் என்னை கவனித்துக் கொண்டே பேசினர் (நான் இந்தியாவிலிருந்து வந்திருந்ததாலும், புத்தகம் அதிகம் படிப்பவன் என்று அவர்கள் கற்பனை செய்து கொண்டதாலும்). அந்தக் கருத்து பரிமாற்றத்தில் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி

 

“இந்தியாவில் இன்றும்  ஜாதிய நிலைபாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருக்கின்றன அல்லவா?” என்பதே

 

ஒரு நிமிடம் மற்ற நாடுகளை சார்ந்தவரிடம் இருந்து இதை எதிர்பாராத நான், ஆம் என்றேன். ஆம் என்ற பதிலுக்கு ஒவ்வொருவரின் முகத்திலும் அவர்கள் வெளிப்படுத்திய அதிர்ச்சியை உணர மட்டுமே முடியும்.. எத்தனையோ நாட்கள், மற்ற நாடுகளிடம் இந்தியா என்பதற்கு கலாச்சாரம் (கலாச்சாரம் என்பதற்கான விளக்கத்தில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் பொதுவெளி புரிதலை இங்கே குறிப்பிடுகிறேன்) , வரலாறு என்று அடையாளம் காட்டி வந்த நாம் அதே வரலாறு , கலாச்சாரம் என்ற பெயரில் ஜாதியையும் அதன் படிநிலைகளையும் ஒட்டிக்கொண்டு பயணிப்பதும், அவற்றை பரந்த வாசிப்பு கொண்ட உலகம் தெளிவாய் கவனிக்கும் நிலையில் கலாச்சாரம் வரலாறு என்று கூறி கொள்வதில் எந்த வித பெருமிதமும் இல்லை மாறாக குற்ற உணர்ச்சியே இருத்தல் வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அடுத்ததாக,

 

“ஜாதிகள் சரி, குறைந்தபட்சம் ஜாதிகளினிடையே திருமணங்கள் கூட நடப்பது இல்லையா?” என்ற கேள்விக்கும் ஆம் என்றே நடைமுறையை சொல்ல முடிந்தது.

 

தொடர்ச்சியாக,

 

“ இந்தியாவில் ஒருவரின் பெயரை வைத்தே அவர்கள் எந்த ஜாதி, தாழ்ந்த ஜாதியா உயர்ந்த ஜாதியா என அறிந்து கொள்ள முடியுமாமே?”

 

இந்த கேள்விக்கு, ‘ நான் இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில் இருந்து வருகிறேன், அங்கே பெரும்பாலும் ஒருவரின் பெயரை வைத்து இன்றைய அளவில் ஜாதிய படிநிலையை அறிய முடியாது. ஆனால் ஏனைய மாநிலங்களில் பெயரை வைத்தே என்ன ஜாதி, ஜாதிய  படிநிலையில் எந்த நிலை என அறிந்து கொள்ளலாம்” என்றதும் அதெப்படி ஒரு மாநிலத்தில் மட்டும் இதும் சாத்தியம் என்றனர்.

 

எந்த வித கருத்தியல் மீதும் முழு ஈடுபாடு கொள்ளாதிருக்கும் எனக்கு, இந்த கேள்விக்கு பதிலாய் திராவிட அரசியலும் அதன் கருத்தியலும் தவிர வேறு பதிலில்லை. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்த கருத்தியலையும் ஜாதிகளை களையும் முன்னெடுப்பை நடத்தியவர்கள் யாரென தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்ட கேள்விக்கு முதல் பதிலாய் பெரியார், அண்ணாவை கூற, அவர்களை படிக்கிறோம் என்று பெயர்களை குறித்து கொண்டனர்.

 

இந்த உரையாடலில் என் எண்ண ஓட்டத்தை மிகவும் அதிக படுத்திய விஷயங்கள் சில.,

அரசியல், சமூக போன்றவற்றின் மீதான நமது பார்வையை, சமத்துவம் எனும் நிலைக்கு எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அடியையும் வரலாற்றையும் மக்களையும் அரசியலையும் படிக்காது, வெறும் சமகால செய்திகளால் மட்டும் ஏற்படுத்திக் கொள்வது பிற்போக்கு அன்றி வேறில்லை.

 

இன்று திராவிடத்தால் வீழ்ந்தோம், ஜாதிய பெயர்களை கலைந்ததால் அடையாளம் தொலைத்தோம் என புலம்புவது எல்லாம் அறியாமையின் விளைவு என்று சொல்வதா இல்லை, முன்னேறிய நிலையில் இருக்கும் ஆணவம் என்று சொல்வதா தெரியவில்லை. ஜாதி ஒழிப்பு பேசும் திராவிடம் இத்தனை ஆண்டுகளில் ஜாதியை ஒழித்து விட்டதா என்றால் இல்லை தான், ஆனால் இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் எழுபது ஆண்டுகளுக்குமான ஒப்பீடு என்பதை நினைவில் கொள்வதும் அவசியமாகிறது.

 

கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கடவுள் எனும் கருத்தியல் கொண்டு அரங்கேற்றப்பட்டுள்ள போர்களும், ஒடுக்குமுறைகளும் சொல்லி அடங்காது. இந்த நிலையில், நம் கண் முன்னிருக்கும் கடவுள் சார்ந்த கருத்தியலால் மக்கள் நிலை பிரிக்க படுவதும், ஒடுக்கப்படுவதும் எதிர்க்கபடாமல், அதை எதிர்த்து கேள்வி கேட்பவரிடம் அந்த நாட்டில் இப்படி இந்த நாட்டில் அப்படி என்பதெல்லாம் தன் மீதான அழுக்கை பாராது மாற்றான் மேலிருக்கும் அழுக்கை துடைக்க சொல்வதை போன்றதே தவிர வேறில்லை.

 

இந்த ஜாதிய படிநிலைகளும், அதன் பொருட்டு ஒவ்வொரு நிலையிலிருக்கும் மக்கள் மீதும் ஏற்படுத்தப்படும் அழுத்தமும் நீடிக்கும் வரை அவற்றை எதிற்கும் கேள்விகளும், திராவிட கருத்தியலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.. அரசியல் கட்சிகளும் ஆட்சிகளும் மாறினாலும் இந்த கருத்தியல் தொடர்வதும் பரிணாம வளர்ச்சி அடைவதும் மிகவும் அவசியம் என்பது மட்டும் நிதர்சனம்.