Posted in #SriScribbles, Book Talks

அணிலாடும் முன்றில் – நா. முத்துகுமார்

பல நாட்களாக புத்தகத்தின் பெயரின்பால் கொண்ட ஈர்ப்பினாலே படிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தகம், நா.முத்துகுமாரின் “அணிலாடும் முன்றில்”. ஒரு வழியாக இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி, சில நாட்களுக்கு முன் படித்து முடித்தேன்.. புத்தகத்தை படிக்கும்பொழுதும் படித்த பின்பும், முத்துகுமாரின் இழப்பை பற்றிய சிந்தனைகளும், அவருடைய எழுத்தில் உள்ள வாழ்க்கையின் உயிரோட்டமும் ஒரு வித சிலிர்ப்பை தந்து கொண்டே இருக்கின்றது.

 

நிகழ்வுகளாய், கதைகளாய், கவிதைகளாய் ஒவ்வொரு உறவையும் வாழ்க்கையின் ஓட்டத்தையும், அவற்றில் உயிர்ப்பை தருகின்ற உறவுகளையும் மிகவும் அழகோட உரையாடும் களமாக அமைந்திருக்கிறது இந்த அணிலாடும் முன்றில்.. உரையாடப்பட்ட உறவுகளில் சில மிகவும் கட்சிதமாக நம்முடன் பொருந்தி போகவும், சில முரணாக வேறுபட்டும், சில நாம் கடந்திராத உறவுகளாகவும் நம் நினைவுகளை தீண்டி செல்கிறது.

 

anilaadum-mundril

 

உறவுகளை விடுத்து அவரவருக்கு என ஒரு வாழ்க்கையை தேடிய ஓட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சியில் புதைந்து போன குடும்ப உறவுகளும், அவற்றின் பசுமையான நினைவுகளையும் இதமாக புரட்டி செல்கையில் ஒரு வித ஏக்கம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. தனி மனித சுதந்திரம், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிரான விவாதங்கள் என நீளும் பகுத்தறிவு / நவீனம் பேசும் சூழலில், உள்ளத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் உறவுகளின் பிணைப்பையும், கொண்டாட்டங்களாக ஒன்று கூடலாக அமைந்த சம்பிரதாயங்கள் தந்த நினைவுகளையும் எளிதில் புறம்தள்ளி விட முடிவதில்லை என்பதை நினைவுபடுத்துகிறது இந்த தொகுப்பு.

 

வாசிப்பு பழக்கத்தை சிறுவர்மலர் மூலமாக ஊக்குவித்த அப்பா, ஒவ்வொருமுறையும் வெளியே செல்லும்போதும் வீடு திரும்பும் நேரத்தையும் எதிர்நோக்கும் அம்மா, கண்டிப்பையும் அன்பையும் சமமாக தந்த பெரிய மாமா,அன்பும் அனுபவங்களுமாக தோழமைகளையும் தனி மனிதனாக உலாவ ஊக்குவிக்கும் சின்ன மாமா,பெரியவனாக உணரவைக்கும் மாமா அத்தைகள்,எப்போதும் எல்லா விதத்திலும் ஆதரவாகாவே அன்பைமட்டும் தரும் சித்திகள், சீதா பழமும் சப்பாத்தியும் இன்றும் பிடிக்க காரனமான அத்தைகள்,ஷூ போலிஷ் போடுவது முதல் நடை பாவனை வரை எப்படி இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்த சித்தப்பா, உறவு முறைகளின் தேவையையும் குடும்ப நிகழ்வுகளின் நினைவுகளையும் என்று தந்து கொண்டிருக்கும் சித்தப்பாக்கள்,சண்டை இடவும் அக்கறை கொள்ளவும் தங்கைகளும் தம்பிகளும், சீக்கிரம் சுயமாக செயல்படும் பெரியவனாக வேண்டும் என என்ன வைத்த அத்தான்கள், நெருக்கமும் தொலைவும் ஒன்றே சேர்ந்த அத்தை மாமாக்கள் – சித்தி சித்தப்பாக்கள் – சித்தப்பா சித்திகள்,பாசமே ஆயினும் தனக்கென தனி பாணி கொண்டு பாட்டியமாக்கள், பிடிக்குமென்று சட்டையில் லட்டு கொண்டு வந்து தரும் அப்பா தாத்தாவும், கார் ஓட்ட மடியில் விளையாட விட்ட அம்மா தாத்தாவும் என ஒவ்வொருவருடனான நினைவுகளின் ஒரு சிறு புள்ளியேனும் புத்தகம் நெடுக பயணித்ததும் அவற்றுடன் இருபதைந்து ஆண்டு காலப்பயணம் செய்ததும் ஒரு புத்துணர்வை தந்தது..

 

அணிலாடும் முன்றில் போன்ற படைப்புகளும் அவற்றுடன் பிணைந்து நிற்கும் உறவுகளின் நினைவுகளுமே இன்றும் நாம் யாவரும் இயங்கி கொண்டிருப்பதன் உந்து சக்தி என்பதே நிதர்சனம். கண்ணீரையும் புன்னகையையும் ஒரு சேர கட்டுபடுத்த முடியாமல் அள்ளித்தரும் படைப்புகள் சில, அவற்றுள் அணிலாடும் முன்றிலிற்கு தனி இடம் உண்டு. உறவுகளும் உணர்வுகளும் இருக்கும் வரை முன்றிலில் அணில்கள் ஆடிக்கொண்டே தான் இருக்கும்..

#அணிலாடும்முன்றில் – ஆனந்தம்